புதுடில்லிநம் நாடு சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகள் ஆனாலும், நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷார் எழுப்பிய கட்டடத்தையே, நம் ஜனநாயக சின்னமாகக் கொண்டாடி வந்தோம். அதுவே, நம் சவால்களை நாம் எதிர்கொள்ளும் விதத்திலும், நம் சட்டங்களை இயற்றுவதிலும் பிரதிபலித்து வந்தது. அந்த அடிமை மனப்பான்மை, புது பார்லிமென்ட் திறக்கப்படுவதோடு துறக்கப்பட வேண்டும் என்பதே, நேற்று பிரதமர் நரேந்திர மோடி, கட்டடத்தைத் திறந்து வைத்துப் பேசியதன் பிரதான கருத்தாக அமைந்தது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழா புதுடில்லியில் நேற்று நடந்தது. கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
லோக்சபா அரங்குக்குள் பிரதமர் மோடி நுழைந்ததும், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஆகியோரது வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது. பிரதமருடன், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ்நாராயண் சிங் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
![]()
|
ஜனநாயகத்தின் கோவில்
புதிய பார்லிமென்ட் கட்டடத்தை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
ஒவ்வொரு தேசத்தின் வரலாற்றிலும் ஒரு சில தருணங்கள், அழியாமல், நீங்கா இடம் பெற்றுவிடும். சில தேதிகள், காலத்தால் அழியாமல் என்றும் நினைவில் நின்றுவிடும். 2023, மே 28ம் தேதி அப்படிப்பட்ட ஒரு தினமாக அமைந்து விட்டது.
சுதந்திர பாரதத்தின் நுாற்றாண்டை நோக்கி நாம் நடை போட்டுக் கொண்டிருக்கும், 'அமிர்த காலம்' என்ற இந்த பொன்னான நேரத்தில், புதிய பார்லிமென்ட் வளாகம் என்ற பரிசை, மக்கள் தங்களுக்கு தாங்களே அளித்துக் கொண்டுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது வெறும் கட்டடம் மட்டுமல்ல; 140 கோடி இந்தியர்களின் ஆசைகள், கனவுகளின் பிரதிபலிப்பு. பாரதத்தின் தீர்மானத்தை, உலகிற்கு எடுத்துரைக்கும், நம் ஜனநாயகத்தின் கோவில் இது.
இந்த புதிய பார்லிமென்ட் கட்டடம், நம் திட்டமிடலை யதார்த்தத்துடன் இணைக்கிறது; கொள்கையை நனவாக்குகிறது; மன உறுதியை நிறைவேற்றுகிறது; நம் உறுதிப்பாட்டை வெற்றியுடன் இணைக்கிறது.
சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகள் நனவாகப் போவதை இந்த கட்டடம் காணப்போகிறது.
ஒற்றுமை
சுயசார்பு பாரதத்தின் துவக்கத்தையும், வளர்ந்த பாரதம் என்ற எண்ணம் மெய்யாவதையும் இந்த கட்டடம் காணப்போகிறது. பாரதம் தனக்கென இனி ஒரு விதி செய்யும். பழங்கால மற்றும் நவீன கால ஒற்றுமைக்கு இந்த கட்டடம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
புதிய பாதைகளை அமைப்பதன் வாயிலாகத் தான் புதிய சிந்தனைகளை விதைக்க முடியும். நம் நாடு, புதிய இலக்குகளை உணர்ந்து புதிய பாதைகளை வகுத்து வருகிறது.
ஒரு புதிய ஆற்றல், புதிய உற்சாகம், புதிய சிந்தனை, புதிய பயணம், புதிய நோக்கங்கள், புதிய திசைகள், புதிய தீர்மானங்கள்மற்றும் புதிய நம்பிக்கைபிறந்துள்ளன.
நம் நாட்டின் உறுதியையும், மக்களின் ஆற்றலையும், மனித சக்தியையும், இந்த உலகமே மரியாதையுடனும், நம்பிக்கையுடனும் நோக்குகிறது.
பாரதம் முன்னோக்கி நகர்ந்தால், இந்த உலகமே முன்னோக்கி நகரும். பாரதத்தின் வளர்ச்சி வாயிலாக, உலகின் வளர்ச்சியை இந்த புதிய பார்லிமென்ட் சாத்தியப்படுத்தும்.
சோழ பேரரசர் காலத்தில் மக்கள் சேவை ஆற்றுவதன் கடமை மற்றும் தேசத்தின் பாதையாக இந்த செங்கோல் கருதப்பட்டது. ராஜாஜி மற்றும் ஆதீனம் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, அதிகார பரிமாற்றத்தின் புனித சின்னமாக இந்த செங்கோல் மாறியது.
செங்கோலின் முக்கியத்துவம்
இந்த புனிதமான செங்கோலின் கண்ணியத்தை மீட்டெடுக்க முடிந்தது நம் அதிர்ஷ்டம். சபை நடவடிக்கைகளின் போது, இந்த செங்கோல் நம்மை உத்வேகப்படுத்திக் கொண்டே இருக்கும்.
பாரதம், ஜனநாயக நாடு மட்டுமல்ல; இது ஜனநாயகத்தின் தாய் நாடு. உலக ஜனநாயகத்தின் அடித்தளமே இங்கிருந்து தான் உருவானது. ஜனநாயகம் என்பது இங்கு பழக்கத்தில் உள்ள வெறும் நடைமுறை மட்டுமல்ல; இது, கலாசாரமாக, சிந்தனையாக, பாரம்பரியமாக மாறி உள்ளது.
ஜனநாயக கூட்டங்கள் மற்றும் குழுக்களின் கொள்கைகளை வேதங்கள் நமக்கு கற்பிக்கின்றன. மகாபாரதத்திலும் குடியரசு குறித்த விபரங்கள் உள்ளன.
தமிழகத்தில், கி.பி., 900ம் ஆண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவை, இன்றைய காலகட்டத்திலும் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகின்றன.
பல ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்தும், பலவற்றை இழந்த பின்னரும், சுதந்திர பாரதத்தின் நுாற்றாண்டு என்ற அமிர்த காலத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.
அமிர்த காலம் என்பது நம் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, வளர்ச்சியின் புதிய பரிமாணங்களை உருவாக்கும் காலகட்டம். இந்த தேசத்திற்கு புதிய திசையையும், எண்ணிலடங்கா நம் ஆசைகளையும் இந்த அமிர்த காலம் நிறைவேற்றும்.
நம் பாரத தேசம், செழிப்பாகவும், கட்டடக் கலையில் சிறந்து விளங்கிய பொற்காலம் ஒன்று இருந்தது. நாம் நுாற்றாண்டு காலமாக அடிமைபட்டு கிடந்த போது, அந்த பெருமைகள் நம்மிடம் இருந்து திருடப்பட்டு விட்டன.
ஆனால், இந்த 21ம் நுாற்றாண்டு நம்பிக்கைகளால் நிறைந்தது. இன்றைய பாரதத்தில், நாம் அடிமை மனப்பான்மையில் இருந்து வெளியே வந்துவிட்டோம். அதற்கு இந்த புதிய பார்லிமென்ட் கட்டடமே சிறந்த உதாரணமாக, நம் கண் முன்னே நிற்கிறது. பாரம்பரியம், கட்டடக் கலை, திறன், கலாசாரம், அரசியலமைப்பு என அனைத்தும் இந்த கட்டடத்தில் அடங்கியுள்ளன.
லோக்சபாவின் உள் அலங்காரம், தேசிய பறவையான மயிலை கருப்பொருளாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா நம் தேசிய மலரான தாமரையை கருப்பொருளாக வைத்து
வடிவமைக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் வளாகத்தில் நம் தேசிய மரமான ஆல மரம் இடம் பெற்றுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளின் சிறப்பு அம்சங்கள் இந்த புதிய கட்டடத்தின் ஒவ்வொரு மூலையிலும் இடம்பெற்றுள்ளன. 'ஒரே பாரதம்; உன்னத பாரதம்' என்பதன் பொருளை, இந்த கட்டடத்தில் உணர முடியும்.
பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் இந்த புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இரு சபைகளிலும் சூரிய வெளிச்சம் நேரடியாக வரும்படி அமைக்கப்பட்டுள்ளன.
கட்டுமானப் பணியில் 60 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அவர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக பார்லி., வளாகத்துக்குள் தனி அரங்கு முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியை, ஏழைகளின் நலனுக்காகவும், நாட்டை புனரமைக்கவுமே செலவிட்டுள்ளோம். ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டப்பட்டள்ளன, 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன, கிராமங்களை இணைக்கும் விதமாக, 4 லட்சம் கி.மீ.,க்கும் அதிகமான சாலைகள் போடப்பட்டுள்ளன. 50 ஆயிரம் புதிய நீர் நிலைகள், 30 ஆயிரம் பஞ்சாயத்து அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நாடு மற்றும் மக்களின் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டதால் இவை சாத்தியமானது.
ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் அந்த நாட்டின் உணர்வை விழித்துக் கொள்ள செய்யும் காலம் ஒன்று வரும். நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன், அப்படி ஒரு காலம் நம் நாட்டில் ஏற்பட்டது.
மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் வாயிலாக, நம் நாட்டின் உணர்வு விழித்துக் கொண்டது. மக்களிடம் புதிய நம்பிக்கை பிறந்தது. சுதந்திரம் என்ற ஒற்றைச் சொல்லால் நாட்டு மக்கள் அனைவரையும் காந்தி இணைத்தார். அதன் பிறகு தான் சுதந்திர போராட்டம் தீவிரமடைந்தது.
இந்த சுதந்திர நாட்டில் அப்படியொரு நிலையில் நாம் இருக்கிறோம். அது தான் அமிர்த காலம். இதை சுதந்திர போராட்ட காலத்துடன் ஒப்பிடலாம். அடுத்த 25 ஆண்டுகளில் நம், 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, வளர்ந்த நாடாக உருவாகி இருக்க வேண்டும் என்பதே இலக்கு. அதற்கு, ஒவ்வொரு இந்தியரும், தன் பங்கை அளிக்க வேண்டும்.
பாரதம் போன்ற பன்முகத்தன்மை நிறைந்த, பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும், அதிக மக்கள் தொகை உடைய நாடு. நாம் நம்பிக்கையுடன் முன்னேறும்போது, அது உலகின் பல நாடுகளுக்கு உத்வேகம் அளிக்கிறது.
வரும் நாட்களில் நம் நாடு அடையப்போகும் வெற்றிகள், உலகின் பல்வேறு நாடுகளுக்குமான வெற்றியாக மாறப் போகின்றன.
நம் வெற்றியின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையை, இந்த புதிய பார்லிமென்ட் கட்டடம் மேலும் வலுவாக்கும். வளர்ந்த பாரதம் என்ற நிலையை அடைய நம்மை ஊக்குவிக்கும்.
தேசத்துக்கே முதலிடம் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள். கடமைக்கு முக்கியத்துவம் அளியுங்கள். உங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டு, நடத்தையில் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழுங்கள். நமக்கான பாதையை நாமே வகுத்துக் கொள்வோம்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயகமான நம் நாட்டுக்கு, இந்த புதிய பார்லிமென்ட் கட்டடம் புதிய ஆற்றலையும், வலிமையையும் தரும்.
தொழிலாளர்களின் கடும் உழைப்பினால் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பார்லிமென்டை புனிதமான இடமாக மாற்ற வேண்டியது உறுப்பினர்களின் கடமை. அதற்காக அவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.
இங்கு எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் வரும் நூற்றாண்டுகளை அலங்கரித்து, வரும் தலைமுறைகளை பலப்படுத்தும் என நம்புகிறேன்.
ஏழை, தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும், வளர்ச்சி மற்றும் அதிகாரம் பெறுவது, இந்த கட்டடத்தின் வழியாகவே நிறைவேறும்.
புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் ஒவ்வொரு செங்கலும், சுவரும், துகளும், ஏழைகளின் நலனுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 25 ஆண்டுகளில் இந்த பார்லிமென்டில் நிறைவேற்றப்பட உள்ள புதிய சட்டங்கள் பாரதத்தை வளர்ந்த தேசமாக மாற்றுவதோடு, வறுமையை ஒழித்து, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கி தரும்.
வளமான, வலிமையான, வளர்ந்த பாரதம் உருவாக இந்த புதிய பார்லிமென்ட் கட்டடம் அடித்தளமாக அமையும் என்பதில் நம்பிக்கை உள்ளது. இந்த தேசம், கொள்கை, நீதி, உண்மை, கண்ணியம், கடமை என்ற பாதையில் நடைபோட்டு வலிமையான தேசமாக உருவாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நாகாலாந்து முதல்வர் நெய்பு ரியோ உள்ளிட்டோருடன், எம்.பி.,க்கள் மற்றும் வெளிநாட்டு துாதர்கள் பலர் பங்கேற்றனர். இந்த விழாவை, 20 எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், 25க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
புதிய பார்லிமென்ட் நேற்று திறக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு சார்பில் இரண்டு குறும்படங்கள் வெளியிடப்பட்டன. 9 நிமிடம் 27 வினாடிகள் உடைய முதல் குறும்படத்தில், புதிய பார்லி., கட்டடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து அரிய தகவல்கள் இடம்பிடித்துள்ளன.
நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பார்லி., கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதையும் குறும்படம் விவரித்துள்ளது.
இரண்டரை ஆண்டுகளில், 60 ஆயிரத்தும் மேற்பட்ட தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு பணியின் வாயிலாக டாடா நிறுவனம், இக்கட்டடத்தை கட்டமைத்துள்ளதும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மற்றொரு குறும்படத்தில், பிரதமர் மோடியால் நிறுவப்பட்ட செங்கோல் குறித்த பின்னணி தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, 900 கைவினை கலைஞர்களால் நெய்யப்பட்ட தரை விரிப்பு கம்பளங்கள், புதிய பார்லிமென்டை அலங்கரிக்க உள்ளன. தேசிய பறவையான மயில் உருவம் நெய்யப்பட்ட தரை விரிப்பு கம்பளம், லோக்சபாவுக்கும்; தேசிய மலரான தாமரை உருவம் நெய்யப்பட்ட தரை விரிப்பு கம்பளம், ராஜ்யசபாவுக்கும் வழங்கப்பட்டன. இவற்றை, 100 ஆண்டுகள் பழமையான பிரபல, 'ஓபீடீ கார்பெட்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் பணியில், உ.பி.,யின் பதோஹி மற்றும் மிர்சாபூர் மாவட்டங்களைச் சேர்ந்த நெசவாளர்கள் ஈடுபட்டனர். தரை விரிப்புகளை தனித்தனியாக வடிவமைத்து, அவற்றை நெசவாளர்கள் ஒன்றாக இணைத்துள்ளனர்.
தற்போது பார்லிமென்டில் நிறுவப்பட்டுள்ள செங்கோல், இதற்கு முன், பல ஆண்டுகளாக உ.பி.,யில் உள்ள அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்த அருங்காட்சியக அதிகாரிகள் கூறியதாவது:அலகாபாத் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 'செங்கோல்' புதிய பார்லி.,யில் நிறுவப்பட்டது, எங்களுக்கு மட்டுமல்லாமல், பிரயாக்ராஜ் மக்களுக்கும் பெருமைக்குரிய விஷயம். நல்ல விஷயத்திற்காக செங்கோல் பயன்படுத்தப்பட்டது, ஓர் உணர்ச்சிகரமான தருணம். செங்கோல் குறித்து அறிய மக்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளதால், அருங்காட்சியகத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அருங்காட்சியகத்தில் செங்கோலின் மாதிரி நிறுவப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாட்டின் வளர்ச்சிக்கு சாட்சியாக இருக்கும்
சுயசார்பு இந்தியாவை உருவாக்குவது முதல், மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது வரை, வரும் ஆண்டுகளில் பல வரலாற்று தருணங்களின் அத்தியாயத்தை, இந்த புகழ்பெற்ற கட்டடம் எழுதும்.
ஜக்தீப் தன்கர்
துணை ஜனாதிபதி, ராஜ்யசபா தலைவர்
இந்திய மக்களின்நம்பிக்கைக்கான சின்னம்
புதிய பார்லி., கட்டடம் திறக்கப்பட்டதன் நினைவாக, சிறப்பு தபால் தலை மற்றும் 75 ரூபாய் நாணயத்தை, பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இந்த நாணயத்தின் மொத்த எடை, 34.65 கிராம். நாணயத்தின் ஒருபுறம் அசோக ஸ்துாபியில் சிங்க முகத்துடன் கூடிய சிற்பம், அதன் கீழே, 'சத்யமேவ ஜெயதே' என்றும், இடதுபுறம், 'பாரத்' என, தேவநகரி எழுத்துருவிலும், வலதுபுறம், 'இந்தியா' என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு உள்ளது. நாணயத்தின் மதிப்பான 75 ரூபாய் என்பது எண்ணில் பொறிக்கப்பட்டு உள்ளது. நாணயத்தின் மறுபுறம் பார்லி., வளாகத்தின் உருவமும், அதன் கீழே 2023 ஆண்டும் பொறிக்கப்பட்டு உள்ளது.
நாட்டு மக்களின் நம்பிக்கை மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான, ஒரு வரலாற்று சின்னமாக புதிய பார்லி., இருக்கும். உலகிற்கு இந்தியா தலைமை தாங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஹரிவன்ஷ்ராஜ்யசபா துணைத் தலைவர்
வரலாற்றில் பொன்னான வார்த்தைகளால் எழுதப்படும்
புதிய பார்லி., கட்டடத்தின் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டுப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை, பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், அவர்களுக்கு பாரம்பரிய சால்வைகளை வழங்கிய பிரதமர் மோடி, நினைவுப்பரிசுகளையும் அளித்து கவுரவப்படுத்தினார்.
புதிய பார்லி., கட்டட திறப்பு விழா, நாட்டின் வரலாற்றில் பொன்னான வார்த்தைகளால் எழுதப்படும். இது, நாட்டு மக்களுக்கு பெருமை அளிக்கிறது. இந்த புதிய கட்டடம், நம் ஜனநாயக பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்.
திரவுபதி முர்மு ஜனாதிபதி
தன் அர்ப்பணிப்பை மோடி உறுதி செய்துள்ளார்
இந்த கட்டடமானது, புதிய யோசனைகளுக்கான உத்வேகத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. ஜனநாயகத்தின் பிறப்பிடமே, இந்தியா தான். சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை நிறுவியதன் வாயிலாக, பாரபட்சமற்ற தலைமையை நோக்கிய தன் அர்ப்பணிப்பை பிரதமர் உறுதி செய்துள்ளார்.
ஓம் பிர்லா
லோக்சபா சபாநாயகர்
ஜனாதிபதியை அழைக்காதது ஏன்?
புதிய பார்லிமென்ட் வளாக திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை அழைக்காதது குறித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
லோக்சபா என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய சபை. ராஜ்யசபா என்பது நியமன உறுப்பினர்கள் அடங்கிய சபை.
ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் பிரதமரை விட உயர்ந்த பதவியில் உள்ளவர்கள். புதிய பார்லிமென்ட் கட்டடத்தை, அவர்களை வைத்து திறப்பது, மரியாதை குறைவாகக் கருதப்படுகிறது.
பிரதமர் திறக்கும்போது, இவர்கள் அந்த இடத்தில் பார்வையாளர்களாக இருந்தால், அவர்களின் உயர்ந்த பதவியை அவமதிக்கும் செயலாக அமைந்துவிடும். எனவே தான், அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும், அவர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் மனதார வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
'நாட்டிலேயே மதிப்பு மிக்க கட்டடம் திறக்கப்படும் வேளையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்ற கட்சியினரையும் வர விடாமல் செய்தது காங்கிரசின் செயலே' என, பெயர் குறிப்பிட விரும்பாத காங்., மூத்த தலைவர் ஒருவர் கூறுகிறார். அவர் கூறியதாவது:
தற்போது ராகுல், எம்.பி., பதவியில் இல்லை. பிரியங்காவும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் இல்லை. இதனால், இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
தங்களுக்கு அழைப்பு விடுக்காததை கவுரவக் குறைவாகக் கருதும் இருவரும், மற்ற கட்சியினரும் செல்லக் கூடாது என்ற எண்ணத்தில் தான், அவர்களைத் துாண்டிவிட்டு, விழாவுக்கு போகவிடாமல் செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஷம கருத்துக்கு பா.ஜ., கண்டனம்
புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த நிகழ்வுக்கு பின், பீஹாரின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் அதிகாரப்பூர்வ, 'டுவிட்டர்' தளத்தில் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், முதல் புகைப்படத்தில் சவப்பெட்டியும், அதற்கு அடுத்த புகைப்படத்தில் புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் மேற்புற தோற்றமும் இடம்பெற்று இருந்தன. 'இவை என்ன?' என, அந்த புகைப்படம் கீழே பதிவிடப்பட்டு இருந்தது.
புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் வடிவத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெளியிட்ட பதிவுக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பீஹார் முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.,வை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,யுமான சுஷில்குமார் மோடி கூறியதாவது:
இதை விட துரதிர்ஷ்டம் வேறு என்ன இருக்க முடியும்? அவர்களுக்கு மூளையே கிடையாது. இந்த புதிய பார்லிமென்ட் வளாகம் மக்கள் பணத்தில் கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளின் பிரதிநிதி களும் பார்லிமென்ட் உள்ளே வந்து தான் ஆகவேண்டும்.
பார்லிமென்டை நிரந்தரமாக புறக்கணிக்க ராஷ்ட்ரீய ஜனதா தளம் முடிவு செய்துவிட்டதா? அக்கட்சி எம்.பி.,க்கள் ராஜினாமா செய்ய உள்ளனரா?
பார்லிமென்ட் கட்டடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டதை விட வேறு என்ன அவமரியாதை இருந்துவிடப் போகிறது? இது, அக்கட்சியின் மிக கேவலமான மனநிலையை காட்டுகிறது. தேசத்துக்கு பெருமை சேர்க்கும் இந்த நன்னாளில், இப்படி ஒரு ஒப்பீட்டை அவர்கள் செய்ததற்கு அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'பெருமை எல்லாம் மோடிக்கே!'
தருமபுரம் ஆதீனம் கூறியதாவது:பாரத நாடு புண்ணிய பூமி; வேதம் நிறைந்த நாடு என, மகாகவி
பாரதியார் சொல்லியிருக்கிறார். நாம் எங்கு பிறக்க வேண்டும் என, சைவ சமய
சாஸ்திரங்கள் சொல்லியுள்ளன. அதாவது, 'நரர்பயில் தேயந்தன்னில் நான்மறை பயிலா நாட்டில், விரவுதல் ஒழிந்து தோன்றல் மிக்க புண்ணியத்தானாகும். சைவமாம் சமயம் சாரும்' என, சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. நான்மறை பயிலாத நாட்டில், நாம் பிறத்தல் தவறு என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இதை எல்லாம் பிரதமர் மோடி உள்வாங்கி உள்ளார்.
வேத மந்திரங்கள், திருமறைகள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, கணபதி ஹோமங்கள் முதலாக விழா துவங்கியது. கங்கை புனித நீர் தெளித்து, மந்திரங்கள் ஓதி, இந்தச் செங்கோலை ஆறு ஆதீனங்கள் சேர்ந்து வழங்கி உள்ளோம். கிரஹப்பிரவேஷம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை, நடத்தி காட்டிய பெருமை பிரதமரே சாரும்.இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்புமிக்க நாள்
இந்திய வரலாற்றில், 2023 மே 28 சிறப்புமிக்க நாள். புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், சபாநாயகர் இருக்கை அருகே பொன் செங்கோல், வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு, சைவ மடத்தைச் சேர்ந்த தலைவர்கள், ஓதுவார்கள் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டது மகிழ்ச்சியே.
- பேராசிரியர் பெ.ஞானசுந்தரம்
செங்கோல் நிபுணர் குழு உறுப்பினர்
கோளறு பதிகம் பாடினோம்
புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில், பண்ணிசை பாராயணம் செய்தோம். நாடு சுதந்திரம் பெற்ற போது, பொன் செங்கோல் வழங்கப்பட்டது. அந்த நிகழ்வை போன்றே, புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில் நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில், மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. திருத்தணி சாமிநாதன் தலைமையில், கரூர் அரசு இசை கல்லுாரி தேவார ஆசிரியர் குமார சுவாமிநாதன், கபாலீஸ்வரர் கோவில் மயிலை சற்குருநாதன் உள்ளிட்ட ஐந்து ஓதுவார் மூர்த்திகள், திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் பாடினோம்.
- திருஞான பாலசந்தர் குமாரவேலு
இசைக்கல்லுாரி தேவார உதவி பேராசிரியர்,
அண்ணாமலை பல்கலை
மிகப்பெரிய அங்கீகாரம்
வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில், ஐந்து ஓதுவார்களுடன் சேர்ந்து பாடியது மகிழ்ச்சி. எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. தமிழுக்கும், ஓதுவார்களுக்கும் முன்னுரிமை அளித்து, வாய்ப்பு வழங்கியது மிகப்பெரிய அங்கீகாரம்.
- - உமா நந்தினி
பெண் ஓதுவார்,
உடுமலைப்பேட்டை