கரூர்: ''கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது, திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்,'' என, வருமான வரித்துறை இயக்குனர் சிவசங்கரன் தெரிவித்தார்.
கரூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை அழைத்துச் செல்ல நேற்று வந்த அவர் கூறியதாவது:
கரூரில் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் காயமடைந்த நான்கு பேர், 'டிஸ்சார்ஜ்' ஆகி விட்டனர்.
தாக்குதலில் இரண்டு பேருக்கு, எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது எட்டு பேரை கைது செய்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
தாக்குதல் நடத்திய அனைத்து நபர்கள் மீதும், நடவடிக்கை எடுக்கச் சொல்லி போலீசுக்கு புகார் கொடுப்போம். தொடர்ந்து கரூரில் சோதனை நடந்து வருகிறது.
சோதனையின் போது பிடிபட்ட பணம், ஆவணங்கள் குறித்து தற்போது சொல்ல முடியாது. திட்டமிடப்பட்ட அனைத்து இடங்களிலும், சோதனை முடிந்த பிறகு, இறுதியாக சென்னை வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து தகவல் தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.