வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டேராடூன்,-ஆண்டுதோறும் நடக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சிகளில், குதிரைகள் பொருத்தப்பட்ட சாரட் வண்டிகளுக்கு பதில் கார்களை பயன்படுத்த, ராணுவ அகாடமி முடிவு செய்துள்ளது.
![]()
|
கடந்த 1969ல், ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய ராணுவ அகாடமிக்கு குதிரைகள் பொருத்தப்பட்ட சாரட் வண்டியை, பாட்டியாலா மகாராஜா பரிசு அளித்தார்.
அணிவகுப்பு நடக்கும் இடத்திற்கு, சிறப்பு விருந்தினரை அழைத்து வருவதற்கு இந்த வண்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆண்டுதோறும் நடக்கும் அணிவகுப்பில், குதிரைகள் பொருத்தப்பட்ட பாட்டியாலா சாரட் வண்டிக்கு பதில், கார்களை பயன்படுத்த இந்திய ராணுவ அகாடமி முடிவு செய்துள்ளது.
இது குறித்து, இந்திய ராணுவ அகாடமியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வரும் 10ம் தேதி நடக்கும் அணிவகுப்பில், பாட்டியாலா சாரட் வண்டி இடம் பெறாது. அதற்கு பதில், கார்கள் பயன்படுத்தப்படும்.
![]()
|
இதே போல், அகாடமியில் தற்போது சேவையில் உள்ள, ஜெய்ப்பூர் சாரட் வண்டி, விக்டோரியா சாரட் வண்டி உள்ளிட்டவையும் இனி அணிவகுப்பில் பயன்படுத்தப்படாது.
ராணுவ தலைமையகத்தின் உத்தரவுக்கு ஏற்ப, காலனித்துவ கால மரபுகளை கைவிட இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த சாரட் வண்டிகளை, அகாடமியில் காட்சிப்படுத்துவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. குதிரைகளை பொறுத்தவரை, அவை பயிற்சிக்காக தொடர்ந்து பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.