வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-''மத்திய கல்வி அமைச்சகத்தின், 'யுவ சங்கம்' நிகழ்ச்சி, நாட்டின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கும், மக்களுடன் மக்கள் தொடர்பு கொள்வதற்கும் சிறந்த முயற்சியாக அமைந்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
![]()
|
வானொலி வாயிலாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின், 'மன் கீ பாத்' எனப்படும், 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் 101வது அத்தியாயம் நேற்று ஒலிபரப்பானது.
நல்வாய்ப்பு
அதில் பிரதமர் மோடி பேசியதாவது:
'யுவ சங்கம்' என்ற இளைஞர் பரிமாற்ற திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் நடத்தி வருகிறது.
இதன் வாயிலாக, நாட்டின் ஒரு பகுதியில் வசிக்கும் மாணவ - மாணவியர், மற்றொரு பகுதிக்கு சென்று அங்குள்ள கலாசாரம் மற்றும் பண்பாடு குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த திட்டத்தின் முதல்கட்டத்தில், 22 மாநிலங்களை சேர்ந்த, 1,200 மாணவ - மாணவியர் வேறு மாநிலங்களுக்கு சென்று வந்துள்ளனர். நாட்டின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதுடன், மக்களுடன் மக்கள் தொடர்பு கொள்வதற்கு மிக சிறந்த வாய்ப்பை இத்திட்டம் உருவாக்கி தருகிறது.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
இந்த உரையின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ - மாணவியருடன் பிரதமர் உரையாடினார்.
யுவ சங்கம் திட்டத்தின் வாயிலாக, தமிழகம் சென்று வந்த பீஹார் கல்லுாரி மாணவி விசாகாவுடன் பிரதமர் விரிவாக உரையாடினார்.
அப்போது, பிரதமர் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு மாணவி விசாகா கூறியதாவது:
வணக்கம், நான் பீஹாரின் சசாராம் என்ற இடத்தில் வசிக்கிறேன். 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பிரிவில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன்.
எங்கள் கல்லுாரி, 'வாட்ஸ் ஆப்' குழு வாயிலாக, 'யுவ சங்கம்' திட்டம் குறித்து தெரிந்து விண்ணப்பித்தேன். தமிழகம் சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது.
எங்களை போன்ற இளைஞர்கள் பிற மாநிலங்களின் கலாசாரம் குறித்து தெரிந்து கொள்ள நல்வாய்ப்பை ஏற்படுத்தி தந்த பிரதமருக்கு நன்றி.
தமிழக பயணம் மிகச் சிறப்பாக அமைந்தது. அந்த மாநிலத்தின் மிக பழமையான கலாசாரம் குறித்து விரிவாக தெரிந்து கொண்டோம்.
வித்தியாசம்
இந்த பயணத்தில் இரண்டு விஷயங்களை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் வாய்ப்பு யாருக்கும் எளிதில் கிடைக்காது.
![]()
|
யுவ சங்கம் திட்ட பிரதிநிதிகள் என்ற வகையில், எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
இஸ்ரோவை முழுமையாக சுற்றிப் பார்த்தோம். தமிழக கவர்னர் மாளிகையான ராஜ் பவனுக்கு சென்று கவர்னரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
தென் மாநில உணவு வகைகளான தோசை, இட்லி, சாம்பார், ஊத்தாப்பம், வடை, உப்புமா ஆகியவை மிகவும் ருசியாக இருந்தன.
வட மாநில உணவுகளை விட ரொம்பவும் வித்தியாசமாக இருந்தன. தமிழக உணவும், மக்களும் எனக்கு மிகவும் பிடித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.