வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று திறந்து வைக்கப்பட்ட புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கலைப்படைப்புகள், வேத காலம் முதல் இன்று வரையிலான, நம் நாட்டின் ஜனநாயக மரபுகளின் கதைகளை விவரிக்கின்றன.
புதிய பார்லி., கட்டடத்தில் உள்ள அரசியலமைப்பு மண்டபத்தில், நாட்டின் ஜனநாயகத்தின் வளர்ச்சி, தொடர் கண்காட்சிகள் வாயிலாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இது, ஹிந்து மரபுகளில் பயன்படும் ஸ்ரீயந்திரத்தால் ஈர்க்கப்பட்டுள்ளது
நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் டிஜிட்டல் நகலைக் கொண்ட அரசியலமைப்பு மண்டபம், பூமியின் சுழற்சியை விளக்கும் பூகோள பந்தையும் கொண்டுள்ளது. அரசியலமைப்பு மண்டபத்தின் முக்கோண கூரையில் இருந்து தொங்கும் பூகோள பந்து, 'பிரபஞ்சத்துடன் இந்தியா' என்ற கருத்தை குறிக்கிறது
லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்ட ஓட்டளிப்பு முறை, நன்கு வடிவமைக்கப்பட்ட ஒலியியல் மற்றும் அதிநவீன, 'ஆடியோ- விஷுவல்' அமைப்புகள் இடம் பெற்றுள்ளன
மகாத்மா காந்தி, சாணக்யா, கார்கி, சர்தார் வல்லபபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் பிரமாண்ட பித்தளை திருவுருவ சிலைகள் மற்றும் ஒடிசாவின் கோனார்க்கில் உள்ள சூரியன் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட தேர் சக்கரம் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன
பொது நுழைவாயில்கள் மூன்று கேலரிகளுக்கு செல்லும் வகையில் உள்ளன.
சங்கீத் கேலரி: நம் பாரதத்தின்--நடனம், பாடல் மற்றும் இசை மரபுகளை வெளிப்படுத்துகிறது
ஸ்தப்த்யா கேலரி: நாட்டின்கட்டடக்கலை பாரம்பரியத்தை உணர்த்துகிறது
ஷில்ப் கேலரி: பல்வேறு மாநிலங்களின் தனித்துவமான கைவினை மரபுகளை காட்சிப்படுத்துகிறது
சங்கீத் கேலரிக்கு உஸ்தாத் அம்ஜத் அலி கான், பண்டிட் ஹரிபிரசாத் சவுராசியா, உஸ்தாத் பிஸ்மில்லா கான், பண்டிட் ரவிசங்கர் உள்ளிட்ட புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தங்களது இசைக்கருவிகளை வழங்கி உள்ளனர்
புதிய பார்லி., கட்டடத்தில் ஓவியங்கள், சுவர் பேனல்கள், கல் சிற்பங்கள் மற்றும் உலோக சுவரோவியங்கள் உட்பட, 5,000 கலைப்படைப்புகள் உள்ளன
லோக்சபா அறையின் உட்புறம், தேசிய பறவையான மயிலின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. ராஜ்யசபாவில், தேசிய மலர் தாமரை சித்தரிக்கப்பட்டு உள்ளது
புதிய பார்லி., கட்டடத்தில், ஆறு புதிய கமிட்டி அறைகள் மற்றும் அமைச்சர்கள் பயன்பாட்டுக்கு, 92 அறைகள் உள்ளன
இந்த ஒவ்வொரு கலைப் பொருட்களின் அருகிலும், 'க்யூ ஆர் கோடு' பொறிக்கப்பட்டுள்ளது; இதை, 'மொபைல் போன்' வாயிலாக, 'ஸ்கேன்' செய்தால், குறிப்பிட்ட அந்த கலைப் பொருட்கள் குறித்த தகவல்களை பார்வையாளர்கள் தெரிந்து கொள்ளலாம்
புதிய கட்டடம், 970 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு மாடிகளைக் கொண்ட இந்த புதிய பார்லி.,யில், 1,224 எம்.பி.,க்கள் அமர முடியும்.
முக்கோண வடிவில் அமைந்த இந்த கட்டடத்திற்கு மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கு 'ஞான வாயில்' என்றும், மற்றொன்றுக்கு 'சக்தி வாயில்' என்றும், மூன்றாவதற்கு 'கர்ம வாயில்' என்றும்பெயரிடப்பட்டுள்ளன
'டாடா புராஜெக்ட் லிட்' என்ற நிறுவனம், 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவு இடத்தில் இந்த கட்டடத்தை கட்டி முடித்துள்ளது
நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் விதமாக புதிய பார்லிமென்ட் கட்டுமானப் பணிகளில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பொருட்களும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளன.