வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த நிகழ்வுக்கு பின், பீஹாரின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் அதிகாரப்பூர்வ, 'டுவிட்டர்' தளத்தில் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், முதல் புகைப்படத்தில் சவப்பெட்டியும், அதற்கு அடுத்த புகைப்படத்தில் புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் மேற்புற தோற்றமும் இடம்பெற்று இருந்தன. 'இவை என்ன?' என, அந்த புகைப்படம் கீழே பதிவிடப்பட்டு இருந்தது.
புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் வடிவத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெளியிட்ட பதிவுக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பீஹார் முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.,வை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,யுமான சுஷில்குமார் மோடி கூறியதாவது:
இதை விட துரதிர்ஷ்டம் வேறு என்ன இருக்க முடியும்? அவர்களுக்கு மூளையே கிடையாது. இந்த புதிய பார்லிமென்ட் வளாகம் மக்கள் பணத்தில் கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளின் பிரதிநிதி களும் பார்லிமென்ட் உள்ளே வந்து தான் ஆகவேண்டும்.
பார்லிமென்டை நிரந்தரமாக புறக்கணிக்க ராஷ்ட்ரீய ஜனதா தளம் முடிவு செய்துவிட்டதா? அக்கட்சி எம்.பி.,க்கள் ராஜினாமா செய்ய உள்ளனரா?
பார்லிமென்ட் கட்டடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டதை விட வேறு என்ன அவமரியாதை இருந்துவிடப் போகிறது? இது, அக்கட்சியின் மிக கேவலமான மனநிலையை காட்டுகிறது. தேசத்துக்கு பெருமை சேர்க்கும் இந்த நன்னாளில், இப்படி ஒரு ஒப்பீட்டை அவர்கள் செய்ததற்கு அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.