வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-புதுடில்லி நீதிமன்றம் தடையில்லா சான்று அளித்ததை தொடர்ந்து, காங்., முன்னாள் எம்.பி., ராகுலுக்கு, நேற்று புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.
![]()
|
இதையடுத்து, அவர் வெளிநாடு செல்கிறார். கடந்த முறை பிரிட்டனுக்கு சென்றபோது, சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் அவர் வெளிநாடு செல்வது, காங்., கட்சியினருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்., தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், கடந்த 2015ல், ராகுல் உள்ளிட்டோருக்கு ஜாமின் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, பிரதமர்மோடியை அவதுாறாக பேசிய வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தொடர்ந்து, எம்.பி., பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதை அடுத்து, சிறப்பு பாஸ்போர்ட்டை ஒப்படைத்த ராகுல், சாதாரண பாஸ்போர்ட் கேட்டு, புதுடில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ராகுலுக்கு 3 ஆண்டுகள் சாதாரண பாஸ்போர்ட் வழங்க தடையில்லா சான்று அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை அடுத்து, ராகுலுக்கு நேற்று புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. ஏற்கனவே திட்டமிட்டபடி, இன்று ராகுல் அமெரிக்காவுக்கு ஒரு வாரம் பயணம் செல்ல உள்ளார்.
சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன், நியூயார்க் நகரங்களுக்கு செல்லும் ராகுல், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
கடந்த மார்ச்சில் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு ராகுல் சென்றார். அப்போது, உள்நாட்டு அரசியல் பிரச்னைகள் குறித்து, அங்கு அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
![]()
|
'வெளிநாட்டிற்கு சென்று, தாய்நாட்டை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசுகிறார்' என, பா.ஜ.,வினர் கடும்கண்டனம் தெரிவித்தனர்.
தற்போது லோக்சபா தேர்தலுக்கான ஆயத்தம் உள்ளிட்ட விஷயங்கள் வேகம் எடுத்துள்ள நிலையில், ராகுல் அமெரிக்கா செல்கிறார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்துகளை மீண்டும் பேசி, கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடுவாரோ என, மூத்த நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர்.