ராமேஸ்வரம்: ''இன்னும் இரண்டு ஆண்டுகளில் விண்வெளியில் ஆளில்லாத ககன்யான் விண்கலம் நிறுவப்படும்,'' என, ராமேஸ்வரத்தில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இந்திய மருத்துவர்கள் சங்க தமிழக கிளை சார்பில், 'சிறந்த எதிர்காலத்துக்கான மருத்துவ அறிவியல் முன்னேற்றங்கள்' என்ற தலைப்பில் கருத்தாய்வு கூட்டம் நடந்தது. அறிவியல் குழுத் தலைவர் ஜோசப் ராஜன் தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:
உலக அளவில் மருத்துவ மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள் குறித்த டாக்டர்கள் கருத்தாய்வு கூட்டம் வரவேற்கத்தக்கது. கொரோனாவில் மருத்துவர்களின் பணி மகத்தானது.
இதனால் இந்தியா கொரோனாவை வென்று பொருளாதார வளர்ச்சி கண்டது. ஆளில்லாத ககன்யான் விண்கலம் அனுப்பும் திட்டத்தில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளதால், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ககன்யான் விண்வெளியில் நிறுவப்படும்.
எதிர்காலத்தில் விண்வெளியில் செயலிழந்த செயற்கைக்கோள் கழிவுகள் இல்லாதபடி, மற்றொரு புதிய செயற்கைக்கோளை அனுப்பி செயலிழந்த செயற்கோளை பூமிக்கு கொண்டு வரும் திட்டம் ஆய்வில் உள்ளது.
இக்கழிவுகளால் புதியதாக ஏவும் செயற்கைக்கோளுக்கு பாதிப்பு ஏற்படாதபடி வரும் காலங்களில் கண்காணிக்கப்படும்.
குலசேகரபட்டினத்தில் செயற்கைக்கோள் உதிரி பாகங்கள் தயாரித்து இங்கேயே ஏவும் திறன் உள்ளதால், வரும் காலங்களில் குறைந்த செலவீனமாகவும், வர்த்தக ரீதியாகவும் பெரிதும் கை கொடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.