கரூர்: ''வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்தபோது, விரும்பத்தகாத அசம்பாவிதம் நடந்து விட்டது,'' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில், தேசிய அளவிலான கூடைப்பந்து இறுதிப் போட்டியை துவக்கி வைத்த, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது:
என் வீடு தவிர, என் சகோதரர், அவரது நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில் உள்ள தொழில் நிறுவனங்கள் பல, நான் பள்ளிக்கல்வி முடிப்பதற்கு முன்பே துவக்கப்பட்டவை. அந்த தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள் முறையாக வருமான வரி செலுத்தக் கூடியவர்கள்.
அப்படிபட்ட தொழில் நிறுவனங்களில், சோதனை நடக்கிறது. வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் அந்த வரியை செலுத்த தயாராகவே இருக்கின்றனர்.
இந்த சோதனை முழுமையாக நிறைவு பெற்ற பிறகு மீண்டும் உங்களை சந்திக்கிறேன். இன்னும், இரண்டொரு நாள் சோதனை நடக்கும் என, கூறுகின்றனர்.
அதிகாலை நேரத்தில், காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து சென்றனர், வருமான வரித்துறை அதிகாரிகள் என்று சொன்னால், யாருக்கும் பதற்றம் வரும். போலீசார் இல்லாமல், வருமான வரித்துறை அதிகாரிகள் மட்டும் செல்லும்போது, அடையாள அட்டைகளை காட்டுங்கள் என, தி.மு.க., நிர்வாகிகள் கேட்டனர்.
அப்போது, விரும்பத்தகாத அசம்பாவிதம் நடந்து விட்டது. இருப்பினும், தி.மு.க.,வினர் சோதனைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்குவர். அடையாள அட்டையை, வருமான வரித்துறையினர் காட்டி இருந்தால், எந்த சம்பவமும் நடக்க வாய்ப்பில்லை. யாரையும் பணி செய்ய விடாமல் தடுக்கவில்லை.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்த போது, சாப்பாடு போட்டனர். நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. வருமான வரித்துறை சோதனை விஷயத்தில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறிய கருத்தை பார்க்கும் போது, அவர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு தகுதி இல்லாதவர்.
வரும் லோக்சபா தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இன்னும் ஆயிரம் சோதனைகள் வந்தாலும், தமிழகத்தின் 40 லோக்சபா தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும். அமைச்சர் உதயநிதி அறக்கட்டளை, சொத்துக்கள் முடக்கம் குறித்து, சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.