வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-தமிழகத்தில், 25 நாட்களாக மக்களை வாட்டி எடுத்த, கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது.
![]()
|
தமிழகத்தில் கத்திரி வெயில் இம்மாதம், 4ம் தேதி துவங்கியது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தினமும் வெயில், 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது.
இவ்வாறு, 25 நாட்களாக வறுத்தெடுத்த கத்திரி வெயில், இன்றுடன் விடைபெறுகிறது. இதனால், வெப்பத்தின் தாக்கம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
திருத்தணியில் நேற்று அதிகபட்சமாக, 41 டிகிரி செல்ஷியஸ் அதாவது, 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மீனம்பாக்கம், பாளையங்கோட்டையில், 40.2; வேலுாரில், 39.6; நுங்கம்பாக்கத்தில், 39.5; நாகப்பட்டினத்தில், 39.3; கடலுார், கரூர் பரமத்தியில், 39; டிகிரி, மதுரையில், 38.6, பரங்கிபேட்டையில், 38.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவியது.
கத்திரி வெயில் முடிவுக்கு வந்தாலும், 30ம்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, 38 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். வெப்பத்தின் அளவு அதன்பிறகே படிப்படியாக குறையும் வாய்ப்புள்ளது.
![]()
|
இதனிடையே, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், 31ம்தேதி கனமழை பெய்யலாம்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில், ஜூன், 1ல், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். சென்னையில் அடுத்த, 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.