தஞ்சாவூர் அருகே, அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் தங்கி, விடைத்தாள் திருத்தும் பெண் பேராசிரியர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே, ரெகுநாதபுரத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளது. கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களை சேர்ந்த, 180 பேராசிரியர்கள், இங்கு பாலிடெக்னிக் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களில், கல்லுாரி விடுதியில் தங்கியுள்ள சிலரிடம், நேற்று முன்தினம் இரவு, வெளி நபர்கள் நான்கு பேர், கல்லுாரியை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து, நள்ளிரவில் விடுதி அறைக் கதவை தட்டி, பெண் பேராசிரியர்களிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்றனர்.
இது குறித்து கல்லுாரி முதல்வரிடம் புகார் அளித்தும், நிர்வாகத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆந்திரமடைந்த பேராசிரியர்கள், சக பேராசிரியர்களுடன் சேர்ந்து, நேற்று விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, பேராசிரியர்களிடம் பேச்சு நடத்தி, சமரசம் செய்தார். அதன் பின், விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்றனர். இதனால், மூன்று மணி நேரம் விடைத்தாள் திருத்தும் பணி பாதித்தது.