மனவளக்கலை மன்றம்
மரக்கன்று வழங்கல்
பள்ளிபாளையம் மனவளக்கலை மன்றம் சார்பில், உலக சமுதாய சேவா சங்கத்தின், கிராமிய சேவை திட்டத்தில், கோவிந்தம்பாளையம் கிராமத்தை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தேர்வு செய்தனர். அங்குள்ள பொதுமக்கள் நோயற்ற, ஆரோக்கிய வாழ்வு வாழவேண்டும் என்ற நோக்கத்துடன், அவர்களுக்கு உடற்பயிற்சி, தியானம் மற்றும் காயகல்பம் பயிற்சி இலவசமாக, தினமும் காலை, மாலை நேரத்தில் கற்று கொடுக்கப்பட்டு வருகிறது.
கிராமத்தை பசுமையாக்கும் முயற்சியாக, மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு நடந்தது. மனவளக்கலை மன்றத்தின், ஈரோடு மண்டல செயலாளர் ஆறுமுகம், பள்ளிபாளையம் மனவளக்கலை மன்ற தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினர்.
மின்மாற்றியை இடமாற்ற
ஆய்வு செய்த அதிகாரிகள்
மக்கள் நீதி மய்யம் சார்பில், மின்வாரிய அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதில், குமாரபாளையம் நகரின் மையத்தில் உள்ள மதீனா ஸ்டோர் அருகே மின்மாற்றி உள்ளது. இதனால் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. அதனால், மின்மாற்றியை இடமாற்றி பயணிகளின் போக்குவரத்துக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.
சேலம்-மெயின் ரோடு, கத்தேரி பிரிவிலிருந்து, ராஜம் தியேட்டர் வரை சாலை நடுவில் உள்ள மின்கம்பங்களை ஓரமாக மாற்றியமைக்க வேண்டும் என, தெரிவித்திருந்தனர். இந்த புகார்படி, உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், பள்ளிபாளையம் உதவி செயற்பொறியாளர் கோபால் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள், நேரில் வந்து மின்மாற்றி மற்றும் சாலை நடுவே உள்ள மின்கம்பங்களை ஆய்வு செய்தனர்.
வாய்க்காலில் விழுந்த
கூலித்தொழிலாளி பலி
ப.வேலுார் அருகே, குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் நல்லாட்சி, 74; கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 24ல் வெற்றிலை பறிக்க வேலைக்கு சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று, ப.வேலுாரிலிருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் உள்ள வாஞ்சி
பிள்ளையார் கோவில் அருகே, ராஜா வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கூலி வேலைக்கு சென்ற நல்லாட்சி, மீண்டும் வீட்டிற்கு செல்ல ராஜா வாய்க்கால் கரையில் நடந்து வந்தபோது, ராஜா வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
மீன் பிடிக்க சென்ற
வாலிபர் உயிரிழப்பு
மீன் பிடிக்க சென்றபோது, கவுண்டம்பாளையம் ஏரியில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் பிரகாஷ், 28; இவர் கூலிவேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஏரியில், இரண்டு நாட்களுக்கு முன் மீன்பிடிக்க சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று, ஏரி பகுதியில் ஆண் சடலம் மிதப்பதாக தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்தபோது சடலமாக மிதப்பது பிரகாஷ் என்பது தெரியவந்தது. தகவலறிந்த ராசிபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி பலகார ராமசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், ஏரியில் மிதந்த பிரகாஷின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில்
பால் வியாபாரி சாவு
கபிலர்மலை அருகே, செம்மடப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 62; பால் வியாபாரி. இவர், நேற்று முன்தினம் காலை, பால் வியாபாரத்துக்கு சென்று விட்டு தனது, 'யமஹா' டூவீலரில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.
கபிலர்மலை கே.என்.எஸ்., கோழி பண்ணை அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி துாக்கி வீசப்பட்டதில், செல்வராஜ் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, நேற்று, செல்வராஜ் உயிரிழந்தார். ஜேடர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
முட்டை விலை உயர்வு
தமிழகம், கேரளாவில் முட்டை விலை கடந்த இரண்டு நாட்களில், 10 காசு
உயர்ந்துள்ளது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. இதில் முட்டை உற்பத்தி மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 480 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 485 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த, 2 நாட்களில் மட்டும் முட்டை விலை, 10 காசு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:
சென்னை, 540, ஐதராபாத், 465, விஜயவாடா, 490, பர்வாலா, 455, மும்பை, 520, மைசூரு, 535, பெங்களூரு, 530, கோல்கட்டா, 550, டில்லி, 475 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை கோழி, கறிக்கோழி விலையில் மாற்றம் செய்யாமல், அதே விலை நிர்ணம் செய்யப்பட்டது.
காளியண்ணனின்
நினைவுநாள் அனுசரிப்பு
இந்திய அரசியல் நிர்ணய சபையின், முன்னாள் உறுப்பினரும், சுதந்திர இந்தியாவின் முதல் பார்லிமென்ட் உறுப்பினருமான காளியண்ணனின், 2ம் ஆண்டு நினைவு தினம், நேற்று நாமக்கல்லில் அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் அண்ணாதுரை சிலை அருகே, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, காங்., கட்சியின் மூத்த நிர்வாகி திருச்சி வேலுசாமி மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, கொங்கு திருமண மண்டபத்தில் காளியண்ணன் உருவப்படம் திறக்கப்பட்டு
மரியாதை செலுத்தப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக், தமிழக காங்., கமிட்டி (ஓ.பி.சி., பிரிவு) மாநில துணைத்தலைவர் செந்தில், கொங்கு வேளாளர் சங்க தலைவர் வெங்கடாசலம், நகர காங்., தலைவர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
அரசு சாதனை விளக்க
புகைப்பட கண்காட்சி
ராசிபுரம் அருகே, அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
நாமகிரிப்பேட்டை, தொ.ஜேடர்பாளையம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சி, 75-வது சுதந்திர திருநாளையொட்டி தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில், தேசியக்கொடியை ஏற்றி வைத்த நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சி, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணை வழங்கும் துவக்க விழா நிகழ்ச்சி ஆகியவற்றின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள்
பார்வையிட்டு, தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை தெரிந்து கொண்டனர்.
சிறுவர் மனமகிழ் மன்றம் சார்பில்
மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி
வெண்ணந்துார் போலீசார் சார்பில், 'சிறுவர் மனமகிழ் மன்றம்' அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிப்பதுடன், பல்வேறு மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. நேற்று, பள்ளி மாணவ, மாணவியருக்கு வெண்ணந்துார் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள, சிறுவர் மனமகிழ் மன்ற அரங்கில், 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்பு நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை வெண்ணந்துார் போலீசார் செய்திருந்தனர்.
பஸ் ஸ்டாண்ட்
வியாபாரிகள் ஆலோசனைகுமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் சங்கம் சார்பில், ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. இதில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பல ஊர்களில் இருந்து விட்டு செல்லும் முதியவர்களை காப்பகத்தில் சேர்க்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்; முதியவர்களால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை நகராட்சி நிர்வாகம் சீர்படுத்த வேண்டும்; மாலை நேரத்தில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்களின் காதல் களியாட்டங்களை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ப.வேலுார் தி.மு.க.,
தெருமுனை பிரசாரம்ப.வேலுார் சுல்தான்பேட்டையில், தி.மு.க., இளைஞரணி சார்பில், இரண்டு ஆண்டு சாதனை குறித்து தெருமுனை பிரசாரம், நேற்று மாலை நடந்தது. தி.மு.க., நகர செயலாளர் முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தனராசு முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் உத்திராபதி, இரண்டு ஆண்டு தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்து பேசினார். இளைஞர் அணி, மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ப.வேலுார் துணை நகர செயலாளர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.
புதிய 'சிடி' ஸ்கேன்
மையம் துவக்கம்
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், 2 கோடியே, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய சி.டி., ஸ்கேன் வழங்குதல்; சீதாராம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம்; கொக்கராயன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார பொது சுகாதார அலகு புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன் வரவேற்றார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
அரசு பள்ளி மைதானத்தில்
கோர்ட்: ஆலோசனை கூட்டம்
சேந்தமங்கலம் அடுத்த பச்சுடையாம்பட்டி பஞ்.,ல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த, 1958ம் ஆண்டு தொடங்கியது. 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, விளையாட்டு மைதானத்தில் நீதிமன்றம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கொல்லிமலையில்
திட்டப்பணி: கலெக்டர் ஆய்வு
நாமக்கல் அடுத்த கொல்லிமலையில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் உமா நேரில் ஆய்வு செய்தார்.
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் நடந்துவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை, கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், பி.டி.ஓ.,விடம் வளர்ச்சி திட்டப்பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
அதை தொடர்ந்து, கொல்லிமலை அரசு மருத்துவ
மனையில் போதுமான மருந்துகள் கையிருப்பு உள்ளதா எனவும், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, வாழவந்திநாடு கிராமத்தில் இயங்கி வரும் கிளை நுாலகத்தை பார்வையிட்டார். ஆவடிப்பட்டி கிராமத்தில், 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். கொல்லிமலை பி.டி.ஓ.,க்கள் சரவணன், தனபால் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சாவர்க்கர் பிறந்தநாள் விழா
ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தில் வீர சாவர்க்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தில், இந்துமகா சபையின் ஸ்தாபகர் வீர சாவர்க்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் நரசிம்மன் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். செயலாளர் மாதேஸ்வரன் மலர் துாவி, அவரது சாதனைகள், வாழ்க்கை வரலாறு குறித்து விரிவாக பேசினார். பொருளாளர் பெரியசாமி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மகா மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகல துவக்கம்
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட, 39வது வார்டு, கொண்டிசெட்டிப்பட்டி, கிழக்கு தெருவில், விநாயகர், முருகன், நவகிரகங்கள், மகா மாரியம்மன் மற்றும் மதுரை வீரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா, நேற்று துவங்கியது. அதையொட்டி,
அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, நேற்று காலை, மோகனுார் காவிரியாற்றிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, ஐயப்பன் கோவிலில் இருந்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது.
தொடர்ந்து, கரகம் பாலித்தல், வடிசோறு எடுத்தல் ஆகியவை நடந்தது. இன்று கலை நிகழ்ச்சி யும், இரவு மாவிளக்கு, வாணவேடிக்கையும் நடக்கிறது. நாளை காலை, 7:00 மணிக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதலும், மாலை, 4:00 மணிக்கு வேல் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் அலகு குத்துதல் மற்றும் மாவிளக்கு, வாணவேடிக்கையும், இரவு 10:00 மணிக்கு தெருக்கூத்தும் நடக்கிறது. 31ல் மஞ்சள் நீராட்டு விழாவும், மறு பூஜையும் நடக்கிறது.