நாமக்கல்: நாமக்கல்லில் வைக்கப்பட்டிருந்த, எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்.,) பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்படி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறை மற்றும் நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இ.வி.எம்., இயந்திரங்கள் பாதுகாப்புடன்
வைக்கப்பட்டிருந்தன.
இங்கு, 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்த எம்-2 வகை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 1,366, கட்டுப்பாட்டு
கருவிகள், 621 மற்றும் எம்--3 வகையிலான பழுதடைந்த கட்டுப்பாட்டு கருவிகள், 8 மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவி, 3 என, மொத்தம், 1,998 ஓட்டுப்
பதிவு இயந்திரங்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் திறக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது.
பின், இந்த இயந்திரங்கள் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. நாமக்கல் ஆர்.டி.ஓ., சுகந்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் திருமுருகன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.