வெண்ணந்துார்: வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட சவுதாபுரம் சேமூர் ஏரி, 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு, சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து உருவாகும் ஊற்றுநீர், மணிமுத்தாறு கால்வாய் வழியாக மின்னக்கல், கட்டிப்பாளையம், மதியம்பட்டி போன்ற ஏரிகளை கடந்து, சேமூர் ஏரியை வந்தடைகிறது.
இந்த ஏரி நிரம்பி, நாமக்கல் வழியாக பரமத்தி வேலுார் சென்று காவிரியில் கலக்கிறது. கடந்தாண்டு பெய்த கன மழையால், ஏரி முழுவதும் நிரம்பி வழிந்தது. அப்போது உருவான ஆகாய தாமரை செடிகள், ஏரி முழுவதும் படர்ந்து காணப்படுகிறது. தற்போது ஏரி நீர் வற்றி வருவதால், ஆகாய தாமரையும் செடிகள் காய்ந்து சருகாக கிடக்கின்றன. மேலும், இந்த ஏரிக்கு மீன் பிடி குத்தகை ஏலம் விடாமல் பராமரிப்பின்றி கிடப்பதால், ஏரி மூலம் கிராம பஞ்சாயத்துக்கு வரும் வருமானம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, ஆகாய தாமரை செடிகளை அகற்றி, மீன்பிடி ஏலம் விட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.