ராசிபுரம்: வெண்ணந்துார் ஒன்றியம், கல்லாங்குளம் அரசு பள்ளி வளாகத்தில், நேற்று காலை, ராசிபுரத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் கூட்டம் ஒன்று நடத்தினர். இதில், இப்பகுதியை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது, மதம் தொடர்பாக பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள், நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்கள், தலைமை
ஆசிரியர் அனுமதியுடன் பல ஆண்டாக இவ்வாறு நடப்பதாகவும், பிரச்னை என்றால் நாங்கள் நிகழ்ச்சியை முடித்துக்கொள்கிறோம் என, தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
மத நிகழ்ச்சி குறித்து, தலைமை ஆசிரியர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, ''எனக்கு எதுவும் தெரியாது; பள்ளி வளாகத்திலேயே அங்கன்வாடி மையமும் உள்ளது. அங்கு வந்தவர்கள் யாராவது நடத்தியிருக்கலாம்,'' என்றார்.
பா.ஜ., வெண்ணந்துார் ஒன்றிய தலைவர் அருள் கூறுகையில், ''அரசு பள்ளியில் மதப்பிரசாரம் செய்வதை கண்டித்து, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.