சேலம், அழகாபுரம் பெரியபுதுார், விவேகானந்தன் தெருவை சேர்ந்தவர் விஜயன், 35; சேலம், செவ்வாய்ப்பேட்டையில் வெள்ளி பட்டறை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் காலை, பட்டறைக்கு சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு, பட்டறை உள்கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 9 கிலோ வெள்ளிக்கட்டி மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போயின. இதன் மதிப்பு, 4.62 லட்சம் ரூபாய். புகாரின்படி செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை பிரதான நுழைவாயில் பகுதியில், 6 கிலோ வெள்ளி கட்டி கிடப்பதாக கூறி இணைப்பை துண்டித்தார். போலீசார் சென்று பார்த்தபோது ஒரு பையில், 6 கிலோ வெள்ளிகட்டி இருந்தது. போனில் பேசிய நபரை தேடி வருகின்றனர்.