புதுடில்லி: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையிலான மோதலை போக்க காங்கிரஸ் மேலிடம் முயற்சி பலனாக காங்., மூத்த தலைவர் வேணுகோபால் முன்னிலையில் சமரசம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னதாக அசோக் கெலாட்டுக்கு எதிராக காங்., மூத்த தலைவராக உள்ள சச்சின் பைலட் தலைமையிலான சில எம்எல்ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் ஆட்சி கவிழும் நிலைக்கு சென்றது.
ஆனால், கட்சி மேலிடம் தலையிட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தது. இதற்கிடையே கடந்த ஆட்சி காலத்தில் பா.ஜ., செய்த ஊழல் பற்றி விசாரிக்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் குறிப்பிட்டும் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை எனக்கூறி மீண்டும் அசோக் கெலாட்டுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தார் சச்சின் பைலட்.
கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்று தேசிய அளவில் கவனம் ஈர்க்கப்பட்ட காங்., இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநில பொதுத்தேர்தலிலும் வெற்றியை பெறுவதில் மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் சில மாதங்களில் தேர்தலை சந்திக்கப்போகும் சூழலில் ராஜஸ்தான் காங்கிரசில் ஏற்பட்டுள்ள பிளவு கட்சி மேலிடத்திற்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளது. இதனை சரிசெய்ய காங்., மேலிடம் முயன்று வருகிறது.

அந்த வகையில் புதுடில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது ராகுல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில் காங்., மூத்த தலைவர் வேணுகோபாபல், அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகிய இரவரையும் தனித்தனியே சந்தித்து பேசினார். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சமரசம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.