வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ், நமது நாட்டின் பிரதமரை அவமதித்து டுவிட்டரில் பதிவிட்டு, ஹிந்து மத நம்பிக்கைகளையும் கேலி செய்துள்ளது, பலத்த கண்டனங்களை எழுப்பி உள்ளது.
தமிழகத்தில் தற்போது பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஒரு கிறிஸ்தவர். கல்லூரியில் பயின்ற காலத்திலேயே மார்த்தாண்டம் கிறித்தவ கல்லூரி மாணவர் சங்கத் தலைவராக இருந்தார். 2016ல் திமுக சார்பில் போட்டியிட்டு முதன்முறை எம்எல்ஏ.,வான இவர், 2021 சட்டசபை தேர்தலிலும் வென்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரானார். அத்துறையில் இவரது செயல்பாடு சரியில்லாததால் சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது இவருக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டது.
மனோ தங்கராஜ், அவ்வப்போது ஹிந்து மத விரோத கருத்துகளை கூறுவது வழக்கம். மாற்று மத்தில் இருந்துகொண்டு பெரும்பான்மை மதத்தை கேலி செய்யக் கூடாது என்றெல்லாம் இவர் யோசிப்பது இல்லை. மத ரீதியான கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டவர். கடந்தாண்டு கன்னியாகுமரியில் குமாரகோவில் முருகன் கோவில் வைகாசி விசாக தேர் திருவிழாவில் மனோ தங்கராஜ் தேரை வடம் பிடித்து இழுக்க சென்றார். இதற்கு பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து பா.ஜ., எம்எல்ஏ காந்தி கூறுகையில், ‛ஹிந்து ஆலயங்கள், ஹிந்து கடவுளை வணங்காதவர்கள், கலாசாரம், பாரம்பரியம் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வைத்து திமுக அரசு அறநிலையத் துறை மூலம் கோயில்களில் நிகழ்சிகளை நடத்துவதாக' குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த மனோ தங்கராஜ், ‛யாருக்கு மத நம்பிக்கை இருக்கிறது, யாருக்கு இல்லை என்று சான்றளிக்க காந்தி யார்? எதன் அடிப்படையில் அவர் சான்றளிக்கிறார்? மாற்று மதங்களை எதிரிகளாக பார்க்ககூடியவர்கள் தான் பா.ஜ.,வினர். திமுக.,வினர் எல்லா மதங்களையும் மதிக்ககூடியவர்கள்' எனக் கூறியிருந்தார். இப்படி கூறும் மனோதங்கராஜ், ஹிந்து மதத்தை மட்டும் ஏன் மதிக்க மாட்டேன் என்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேற்று (மே 28) புதுடில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கிருந்த தமிழக ஆதீனங்கள் அளித்த புகழ்பெற்ற செங்கோலை தரையில் விழுந்து வணங்கினார். அந்த நேரத்தில் ஒரே ஒரு ஆதீனம் மட்டும் கையை உயர்த்திக் காட்டினார். மற்றவர்கள் அமைதியாக நின்றுகொண்டு இருந்தனர். செங்கோலைத் தான் பிரதமர் வணங்கினார் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர். ஆனால், பிரதமர் மோடி ஆதீனங்கள் காலில் விழுவதாக நினைத்துக்கொண்ட மனோதங்கராஜ், பிரதமரையே அவமதித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பகிர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ், ‛மூச்சு இருக்கா? மானம்?? ரோஷம்???' என விமர்சித்து பதிவிட்டுள்ளார். இதற்கு பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‛அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், தான் கிறிஸ்தவராக இருப்பதால் இன்னொரு மதத்தை விமர்சிப்பது சரியா. மத்திய அரசை எதிர்ப்பது என்றால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். மத ரீதியாக எதிர்க்க இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?' எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
‛‛பொதுவாக மாற்று மதத்தினரை பெரும்பாலானோர் விமர்சனம் செய்வதில்லை. பேச்சுரிமைக்கு எல்லை இல்லையா. பிரதமர் மோடியை கீழ்த்தரமாக விமர்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது'' என பலரும் கண்டன கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
நீக்கம்
தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால் பிரதமரை கேலி செய்து டுவிட்டரில் பதிவிட்டதை மனோ தங்கராஜ் நீக்கி உள்ளார்.