வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய பிரதேசத்தில் இந்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 150 இடங்களில் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் 114 இடங்களிலும், பா.ஜ., 109 இடங்களிலும் வென்றன. பெரும்பான்மைக்கு 116 எம்எல்ஏ.,க்கள் தேவை என்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனையடுத்து காங்., கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 121 எம்எல்ஏ.,க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரசின் கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றார். அதன்பிறகு நிகழ்ந்த அரசியல் மாற்றத்தால் காங்., ஆட்சி கவிழ்ந்தது. பெரும்பான்மை எம்எல்ஏ.,க்களின் ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைத்தது. சிவராஜ்சிங் சவுகான் முதல்வரானார்.
இந்தாண்டு இறுதியில் ம.பி.,யில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பாக டில்லியில் உள்ள காங்., தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல், கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் கூறியதாவது:
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது பற்றி ஒரு விரிவான ஆலோசனை நடத்தினோம். கர்நாடகாவில் 136 இடங்களில் வெற்றி பெற்றது போலவே மத்திய பிரதேசத்தில் 150 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.