ஆர்.கே.பேட்டை:பெரிய குளத்தின் நீர்வரத்து கால்வாய் துார்ந்து கிடக்கிறது. இதை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனுார் கிராமத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது பெரிய குளம். வற்றாத பெருமைக்கு உரிய குளத்திற்கு, வடக்கு திசையில் உள்ள யானை மலையில் இருந்து, நீர்வரத்து உள்ளது.
இதற்கான வரத்து கால்வாய்களும் உள்ளன. சில ஆண்டுகளாக, குளத்தின் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது. வரத்து கால்வாய்கள் பராமரிக்கப்படாமல், துார்ந்து கிடப்பதே காரணமாகும்.
வாரியார் நகர் அருகே, வரத்து கால்வாயின் குறுக்கே உள்ள, தரைப்பாலத்தின் கான்கிரீட் குழாய்கள் துார்ந்து உள்ளன. வரத்து கால்வாயை சீரமைத்தால், நீர்வரத்து அதிகரிக்கும்.
குளத்தின் நீர்மட்டமும் உயரும். நீர்வளத்தை பாதுகாக்கும் விதமாக, வரத்து கால்வாய்களை துார்வாரி பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.