ஜெய்ப்பூர்,திருமண நாளன்று மணப்பெண், தன் உறவினருடன் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த மணமகன், 13 நாட்கள் மணமகள் வீட்டிலேயே தங்கியிருந்து, அந்த பெண்ணை தேடிப்பிடித்து திருமணம் செய்த சம்பவம், ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷ்ரவன் குமார். பாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணீஷா. இருவருக்கும், பாலி மாவட்டத்தில் திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டிருந்தது.
திருமண நாளன்று மணமகள் வீட்டின் அருகேயுள்ள திருமண மண்டபத்துக்கு மணமகனும், அவரது உறவினர்களும் வந்து காத்திருந்தனர். திருமணம் மற்றும் விருந்துக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்தன. திருமணத்துக்கான நேரம் நெருங்கியும், மணமகள் வரவில்லை.
இது குறித்து மணமகன் வீட்டார் விசாரித்தபோது தான், மணமகள், தன் உறவினர் ஒருவருடன் மாயமாகி விட்டது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் செய்வதறியாது திகைத்தனர்.
மணமகள் வீட்டார், அவர்களிடம் மன்னிப்பு கேட்டனர். ஆனால், மணமகனும், அவரது குடும்பத்தினரும் அங்கிருந்து செல்ல மறுத்தனர்.
'திருமணம் முடியாமல் சொந்த ஊருக்கு சென்றால், உறவினர்கள் அவமரியாதையாக பேசுவர். அதனால், அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் போக மாட்டோம். எப்படியாவது தேடிப்பிடித்து அழைத்து வாருங்கள்' எனக் கூறி, மணமகள் வீட்டிலேயே தங்கி விட்டனர்.
இதையடுத்து, மணமகள் வீட்டார் போலீசில் புகார் அளித்தனர். 13 நாட்களுக்குப் பின், மணீஷா வேறு ஒரு ஊரில் இருப்பதை அறிந்த போலீசார், அவரை அங்கிருந்து அழைத்து வந்து, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இதன்பின், மணிஷா கழுத்தில் ஷ்ரவன் குமார் தாலி காட்டினார். 13 நாட்களுக்குப் பின், மனைவியுடன் மீண்டும் தன் சொந்த ஊருக்கு ஷ்ரவன் குமார் சென்றார்.
அதேநேரத்தில் மணீஷாவை அழைத்துச் சென்ற உறவினர் யார்? இருவரும் காதலித்தனரா, 13 நாட்கள் இருவரும் எங்கு தங்கியிருந்தனர் என்ற விபரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.