புதுடில்லி,மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக பிரவீன்குமார் ஸ்ரீவஸ்தவா நேற்று பொறுப்பேற்றார். 'விஜிலன்ஸ் கமிஷன்' எனப்படும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம், லஞ்சம், ஊழலுக்கு எதிராக செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும்.
இதன் கண்காணிப்பு ஆணையராக செயல்பட்டு வந்த சுரேஷ் என். பட்டேலின் பதவிக் காலம் கடந்த டிசம்பரில் முடிந்தது. இதையடுத்து, பொறுப்பு ஆணையரக பிரவீன்குமார் ஸ்ரீவஸ்தவா பதவி வகித்து வந்தார். இந்நிலையில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக இவர் நேற்று பொறுப்பேற்றார்.
![]()
|
புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில், துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பிரவீன்குமார், வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயாவில் பணியாற்றி உள்ளார்.
உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலராகவும், கூடுதல் செயலராகவும் இருந்த காலத்தில், இந்திய காவல் பணி, மத்திய ஆயுதக் காவல் படை ஆகியவற்றில் பொது நிர்வாகம் தொடர்பான விஷயங்களை இவர் கையாண்டார். உலக வர்த்தக அமைப்பின் கீழ் உள்ள சேவைகளில் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அரசுக்கு ஸ்ரீவஸ்தவா உதவியுள்ளார்.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் இயக்கத்தின் இணைச் செயலராகவும், இயக்குனராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.