அதிகாலையில், வழக்கத்தை விட சீக்கிரமாகவே ரேஸ்கோர்ஸ் நடைபாதைக்கு வந்து சேர்ந்த சித்ராவும், மித்ராவும் வண்டிகளை நிறுத்தி விட்டு, முதல் சுற்று நடையைத் துவக்கினர். கூட்டம் குறைவாக இருந்ததால், கொஞ்சம் சத்தமாகவே ஆரம்பித்தாள் மித்ரா...
''என்னக்கா... வரவர நம்ம ஊர்ல ஐ.டி.,ரெய்டு நடக்குறது, ஓ.டி.டி.,படம் ரிலீஸ் மாதிரி சத்தமில்லாம ஆனா அடிக்கடி நடக்குது...இப்போ நடந்ததுல ஏதாவது விசேஷம் இருக்கா?''
மித்ராவின் கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதிலளித்தாள் சித்ரா...
''பெருசா ஆவணங்கள் மாட்டுச்சான்னு தெரியலை...ஆனா சில விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கு...!''
''இருக்கலாம்க்கா...காளப்பட்டி தண்ணிவண்டிக்காரர் வீட்டுல இன்னும் ரெய்டு முடிஞ்சபாடில்லை...ஸ்டேட் முழுக்க டாஸ்மாக் கடைகளுக்கான அட்டைப் பெட்டி காண்ட்ராக்ட் அவருதான் எடுத்திருக்காராம். அதனாலதான், அவரு வீட்டுல ரெய்டுன்னு சொல்றாங்க!''
ஆணாதிக்க ஆபீசர்?
''எல்லாம் சரிதான்...இதே ஊர்ல 10 வருஷமா, ஏகப்பட்ட ஊழல் பண்ணி, கோடிகள்ல சம்பாதிச்சு வச்சிருக்குறவுங்களோட வீட்டுல,கம்பெனிகள்ல பேருக்குக் கூட ஏன் ஐ.டி., ரெய்டு நடக்கலைன்னு, கோயம்புத்துார் இன்டஸ்ட்ரிக்காரங்களே பேச ஆரம்பிச்சிட்டாங்க!''
''ஆளும்கட்சிக்காரங்களும் சோஷியல் மீடியாவுல இதைத்தான் போடுறாங்க. கொங்கு பெல்ட்ல தி.மு.க.,வை 'வீக்' பண்றதுக்காக இந்த ரெய்டு நடக்குதுன்னு...இப்ப ஏதோ கட்சி கான்கிரீட் பலத்துல இருக்குறது மாதிரித்தான் நினைப்பு!''
மித்ராவின் கமெண்ட்டைக் கேட்டு புன்னகைத்த சித்ரா, ஒலிபெருக்கியில் பேசிய பெண் போலீசின் குரலைக் கேட்டு பேச்சை மாற்றினாள்....
''மித்து! நம்ம சிட்டியில லேடி டிராபிக் போலீஸ் நிலைமை பரிதாபம் தெரியுமா...இந்த வெயில்ல எவ்ளோ கஷ்டப்படுறாங்க...அவுங்களை நடுரோட்டுல வச்சு, மக்களுக்கு முன்னால தாறுமாறா திட்டிருக்காரு ஒரு போலீஸ் ஆபீசர்!''
''யாருக்கா அந்த ஆணாதிக்க ஆபீசர்?''
''சொல்றேன்...ஆர்.எஸ்.புரம் டிராபிக்ல இருக்குற ஒரு லேடி எஸ்.எஸ்.ஐ., போன வாரம் ஒரு நாள் அவினாசிலிங்கம் யுனிவர்சிட்டி சிக்னல் கிட்ட டிராபிக் க்ளியர் பண்ணிட்டு இருந்திருக்காங்க...அப்போ கார் சிக்னல்ல நின்ன ஒரு கார்ல, பயங்கர சத்தமா ஹாரன் அடிச்சிருக்காங்க...அந்த லேடி எஸ்.ஐ., போயி, 'உங்களுக்கு இன்னும் சிக்னல் விழலை...எதுக்கு ஹாரன் அடிக்கிறீங்க'ன்னு கேட்ருக்காங்க!''
''கரெக்ட்தான...!''
''அதுக்கு அந்த வண்டியில இருந்து இறங்குனவரு, 'நான் யார் தெரியுமா...மதுவிலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர். நீ சாதாரண எஸ்.எஸ்.ஐ., என்னை கேள்வி கேக்குறியா'ன்னு மக்களுக்கு முன்னால தாறுமாறா திட்டிருக்காரு. அங்க இருக்குற மக்களே பாத்துட்டு நொந்து போயிட்டாங்க!''
அழாத குறையா...
''நம்ம ஊர்ல இருக்குற பல பேருக்கு லேடீஸ்னாலே இளக்காரமாப் போச்சுக்கா...இப்பிடித்தான் போன வாரம் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டத்துல, டி.ஆர்.ஓ., செல்வசுரபியை விவசாயிகள் சங்கத்துக்காரங்க சில பேரு மிரட்டுறது மாதிரி பேசிருக்காங்க!''
''யாரு...பச்சைத் துண்டு போட்டுட்டு வந்து, நாங்கதான் 'ஒரிஜினல் விவசாயிகள் சங்கம்'னு சத்தம் போடுவாங்களே...அவுங்களா?''
''அவுங்கதான்க்கா...விவசாயிகள்ட்ட மனு வாங்கி நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஆர்டர் போட்டுட்டு கலெக்டர் கிளம்பிட்டாரு. அப்புறம் டி.ஆர்.ஓ.,தான் மீட்டிங் நடத்திருக்காங்க...ஏற்கனவே, 'தனி நபர் பிரச்னை, மனு கொடுத்ததைப் பத்தி பேசி நேரத்தை வீணடிக்காம பொதுப்பிரச்னையப் பேசுங்க'ன்னு கலெக்டர் சொல்லிருகிறதை நினைவுபடுத்தி 'எல்லாரும் சுருக்கமாப் பேசுங்க'ன்னு சொல்லிருக்காரு!''
''அதுக்கு என்ன பண்ணுனாங்களாம்?''
''ஆனா, கூட்டமா வந்த விவசாயிகள் 'எங்களுக்குப் பேச வாய்ப்பு தரணும்'னு வாக்குவாதம் பண்ணுனாங்க...சீட்ல இருந்து எந்திரிச்சு கோஷம் போட ஆரம்பிச்சிட்டாங்க...ஒரு கட்டத்துல பகிரங்கமா மெரட்டுறதைப் பாத்து மத்த விவசாயிகளே ஒரு மாதிரி ஆயிட்டாங்க. பேச வாய்ப்பு கொடுத்ததும், சுந்தராபுரம் பிரைவேட் ஹாஸ்பிடல்ல பணம் வசூலிச்சதைப் பத்திப் பேசிருக்காங்க!''
''இதைத்தான் அவுங்க திரும்பத் திரும்பப் பண்றாங்க!''
''அதைத் தடுத்ததுக்கு மறுபடியும் மெரட்டிருக்காங்க...அன்னிக்கு நடந்த விஷயம் பத்தி போலீஸ்லயே புகார் கொடுத்திருக்கணும். ஆனா கவர்மென்ட் பிரஷர்ல கண்டுக்க மாட்டேங்கிறாங்கன்னு அக்ரி ஆபீசர்கள் அழாத குறையா புலம்புறாங்க!''
மறைச்சிட்டாங்க...
மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போது, எதிரில் நடந்து சென்ற கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்ததும், அடுத்த 'டாபிக்'கிற்குத் தாவினாள் சித்ரா...
''மித்து! நம்ம ஜி.எச்.,ல கர்ப்பிணிகளுக்கும், பேஷண்ட்களுக்கும் சமைக்கிற கிச்சன் இருக்குல்ல... தினமும் ஆயிரம் பேருக்கு மேல சாப்பாடு பண்ணிக் கொடுக்குறாங்க...பால், முட்டை, பழமெல்லாம் வாங்கிக் கொடுக்குறாங்க. போன வாரத்துல ஒரு நாள், அந்த கிச்சன்ல இருந்து 200 லிட்டர் பால், 60 முட்டை, பழங்களை யாரோ திருடிட்டுப் போயிட்டாங்க!''
''அடப்பாவிகளா...!''
''அதைப் பத்தி நிர்வாகம் தரப்புல விசாரிச்சிருக்காங்க...கிச்சன்ல வேலை பாத்த ஆறு பேரு, ஒரு நர்ஸ்கிட்ட விளக்கம் கேட்டு மெமோ கொடுத்திருக்காங்க...அதுல 'அரை லிட்டர் பால் 60 முட்டை'ன்னு போட்ருக்காங்களாம். அதுக்கு 'மிச்சமிருந்தது கெட்டுரும்'னு எடுத்துட்டுப்போனதா விளக்கம் கொடுத்து இருக்காங்க...ரெண்டு தரப்பும் சேர்ந்து முழுப் பூசணிக்காயை பால்ல மறைச்சிட்டாங்க!''
''முழுப்பூசணிக்காயை பால்ல மறைச்சது நம்ம ஊரு ஆவின்தான்க்கா...இங்க பல வருஷமா பெரிய ஆபீசரா இருக்குறவரு, இந்த மாசம் ரிட்டயர்டு ஆகுறாரு...அவருக்கு இன்னிக்கு நைட் 'மெகா பார்ட்டி'க்கு ஏற்பாடு நடந்திருக்காம். அவர் இருக்குறப்பதான், கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நம்ம ஊரு ஆவின் ஆபீஸ்ல எட்டரை லட்ச ரூபாய் பணம் பிடிச்சாங்க...ஒரு ஊழியரை அரெஸ்ட்டும் பண்ணாங்க!''
''அதுல இவரு மட்டும் எப்பிடிக்கா தப்பிச்சாரு....முன்னாடி இருந்த மினிஸ்டர் நாசர்தான் இவரைக் காப்பாத்துனார்னு ஒரு தகவல் பரவுச்சு...இன்னும் சொல்லப்போனா, அந்த பணமே அமைச்சருக்காத்தான் வாங்குனோம்னு இவரு சொன்னதும் அவரோட அமைச்சர் பதவி பறிக்கிறதுக்கு ஒரு காரணம்னு சொன்னாங்க...!''
''ஆமாக்கா...அதை விட பெரிய புகார், அவர் வாங்குன ஏழு கோடி ரூபா பன்னீர் மேக்கிங் மெஷின் பத்திதான். ஆக்சுவலா, பால் மிச்சமா இருக்குற ஆவின்கள்லதான் இந்த மெஷினை வாங்குவாங்களாம். நம்ம ஊருல ஏற்கனவே பால் பற்றாக்குறையா இருக்கு...கமிஷனுக்காகவே இவர் வாங்குன அந்த மெஷின், வெட்டியாவே கெடக்குது...இவர் மட்டும் எந்தப் பிரச்னையும் இல்லாம 'ரிட்டயர்டு' ஆகப்போறாரு!''
பரிதாபம்
மித்ரா பேசிக் கொண்டிருக்கும்போது, வாக்கி டாக்கியுடன் வந்த சேனிட்டரி இன்ஸ்பெக்டர், துாய்மை பணியாளர்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் சித்ரா ஆரம்பித்தாள்...
''நம்ம கார்ப்பரேஷன்ல இருக்குற சேனிட்டரி இன்ஸ்பெக்டர்கள் பல பேரு, இந்த மாதிரி பரபரன்னு வேலை பாக்குறாங்க. மத்தவுங்களையும் வேலை வாங்குறாங்க...ஆனா கவுண்டம்பாளையம் ஏரியாவுல இருக்குற எஸ்.ஐ.,ஒருத்தரு, தன்னோட வீட்டுலயும், அவரோட அக்கா, தங்கச்சி வீட்டுகள்லயும் துாய்மைப் பணியாளர்களை வச்சு, துணி துவைக்க வைக்கிறாராம்!''
''இவுங்க நிலைமை உண்மையிலேயே பரிதாபம்க்கா...வடக்கு மண்டல ஆபீஸ்ல போன வாரம் இவுங்களுக்காக மெடிக்கல் கேம்ப் நடத்திருக்காங்க...பிளட், யூரின் டெஸ்ட் எடுத்திருக்காங்க. அதுல பல பேருக்கு உடல் வலி, காய்ச்சல் இருந்திருக்கு...ஆனா கொரோனா டெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி இருக்காங்க. ஆனா கார்ப்பரேஷன்ல அதுக்கு ஏற்பாடே பண்ணலையாம்!''
கொந்தளிச்சிட்டாங்க...
''ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்துல, கார்ப்பரேஷன் ஏற்பாடு பண்ணுன கவுன்சிலர்கள் கூட்டத்துல ஒரே கலாட்டாவாயிருச்சு தெரியுமா?''
''என்னக்கா சொல்றீங்க...கலையரங்கத்துல கவுன்சிலர்கள் மீட்டிங்கா?''
''குறிச்சி, குனியமுத்துார், பாதாள சாக்கடைத் திட்டப் பணி நடக்குதுல்ல...அதோட டெக்னாலஜி, எப்பிடி நடக்கப்போகுதுங்கிறதைப் பத்தி, கவுன்சிலர்களுக்கு விளக்கம் கொடுக்குறதுக்காக டி.எம்.ஏ., ஆபீஸ்ல இருந்து இந்தக் கூட்டத்தை ஏற்பாடு பண்ணிருக்காங்க...அதுல கலந்துக்கிட்ட கவுன்சிலர்கள் எல்லாரும் 'எல்லாம் சரி...திட்டத்தை எப்போ முடிப்பீங்க'ன்னு கேள்வியாக் கேட்டு வெகுண்டெழுந்துட்டாங்களாம்!''
''ஆ...சூப்பரு!''
''அதுக்கு கார்ப்பரேஷன், குடிநீர் வடிகால் வாரிய ஆபீசர்கள் பதில் சொல்ல முடியாமத் திணறிருக்காங்க. நாங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியலைன்னா எதுக்கு எங்களைக் கூப்பிட்டீங்கன்னு கொந்தளிக்க, வேற வழியில்லாம சீக்கிரமே கூட்டத்தை முடிச்சிட்டாங்களாம்!''
''அவுங்க சீக்கிரம் முடிச்சிருக்காங்க...இ.பி.,யில லேட்டா ஆரம்பிச்சிருக்காங்க!''
தனது தகவலுக்கு தானே டிரைலர் ஓட்டிவிட்டு, மேட்டரைத் தொடர்ந்தாள் மித்ரா...
''ஜெயில் கிரவுண்ட்ல அரசு பொருட்காட்சி நடக்குதுல்ல... அதுல கவர்மென்ட் டிபார்ட்மென்ட்கள் சார்புல தனித்தனியா அரங்கம் வச்சிருக்காங்க...அதுல மின் வாரியத்தோட அரங்கும் இருக்கு...போன 13 ஆம் தேதி தொடங்குன இந்த எக்ஸிபிஷனுக்கு, 26 ஆம் தேதியன்னிக்குதான் இ.பி.,யில இருந்து பிரஸ்க்குத் தகவல் கொடுத்திருக்காங்க...உள்ளூர்ல மினிஸ்டர் இருக்குறப்பவே இ.பி.,காரங்க தீயா வேலை பாக்குறாங்க!''
அட... நல்லாயிருக்கே...
''நல்லா சந்தோஷப்படுற மாதிரி ஒரு தகவலும் உன்கிட்ட இல்லையா?''
''ஓ இருக்கே...நம்ம மாவட்டத்துக்குப் புதுசா வந்திருக்குற சி.இ.ஓ.,சுமதியை டீச்சர்கள் நல்லாக் கொண்டாடுறாங்க...எந்தக் கூட்டத்துக்குப் போனாலும், மாணவர்களுக்கு அட்வைஸ் பண்றது மாதிரி ஒரு பாட்டுப் பாடிட்டுதான் பேசவே ஆரம்பிக்கிறாராம்.
மாடல் ஸ்கூல்ல 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!'ன்னு பாடிட்டுதான், கோடைகால பயிற்சி வகுப்பை துவக்கி வச்சிருக்காரு!''
''பாடிப்பாடியே அவர் நல்ல பேரு வாங்குறாரோ?''
''ஆமாக்கா! தலைமையாசிரியர்கள் கூட்டம், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கான விழான்னு எங்க போனாலும் மத்தவுங்க கவனிக்கிற மாதிரி கருத்தான பாட்டுகளாப் பாடுறாராம். டீச்சரா இருந்து, பதவி உயர்வுல இந்தப் பொறுப்புக்கு வந்ததால, எந்த பந்தாவும் இல்லாம, எளிமையா இருக்கார்னு டீச்சர்களுக்கு சந்தோஷம்!''
நல்ல தகவலைப் பரிமாறிய மித்ரா, 'அக்கா! எனக்கு உடனே சூடா ஒரு காபி சாப்பிடணும்' என்று சொல்ல, இருவரும் வண்டியை நோக்கி ஓடத்துவங்கினர்.