தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில், தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் செயல்பாடு குறித்து பேராவூரணி எம்.எல்.ஏ., வெளிப்படையாக பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று முன்தினம் தி.மு.க., தெற்கு மாவட்டம் சார்பில், பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், அமைச்சர் மகேஷ், எம்.பி., பழனிமாணிக்கம், எம்.எல்.ஏ.,க் கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
10 நிகழ்ச்சி
கூட்டத்தில், பேராவூரணி தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பேசியதாவது:
கட்சி நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. அதிகாரிகள் சொல்வது தான் நடக்கிறது. தலையாரி, அங்கன்வாடி பணிகளுக்கு கட்சியினர் பரிந்துரை கொடுத்திருந்தோம். ஆனால், நாங்கள் கொடுத்த பட்டியலை, மாறுதலாகி சென்ற கலெக்டர் கிடப்பில் போட்டு விட்டார்.
தொகுதியில், நலத்திட்ட பணிகளுக்கான நிகழ்ச்சியை, எம்.எல். ஏ.,க்கள் உள்ளிட்ட கட்சியினரை ஆலோசிக்காமல், பயண விபரம் உட்பட அனைத்தையும் அதிகாரிகளே தீர்மானிக்கின்றனர்.
அமைச்சர்களும் எங்களை கலந்து கொள்வதில்லை. ஒரு மணி நேரத்தில், 10 நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு வருகிறீர்கள்.
உங்களை வரவேற்க, 1 லட்சம் ரூபாய் செலவு செய்து, பல மணி நேரம் நிர்வாகிகள் காத்திருக்கின்றனர்.
ஆனால், நிகழ்ச்சிக்கு வந்து, ரிப்பன் வெட்டி, உடனே காரில் ஏறி கிளம்பி விடுகிறீர்கள். நிர்வாகிகளிடம் சால்வை வாங்குவதில்லை; கட்சியினரிடமும், நிர்வாகிகளிடமும் முகம் கொடுத்து பேசுவது இல்லை.
இதனால், கிளை, ஒன்றிய செயலர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இப்படி இருந்தால், எப்படி வரும் எம்.பி., தேர்தலில் ஓட்டு வாங்க முடியும்?
இவ்வாறு அவர் பேசினார்.
சமாதானம்
அப்போது, எம்.பி., பழனிமாணிக்கம் குறுக்கிட்டு, அசோக்குமாரை பேசவிடாமல் தடுத்தார். உடனே, 'நீங்க தொகுதி பக்கமே வர்றதில்லை; உங்க நிதியில் என்ன செய்திருக்கிறீர்கள்... பட்டிமன்ற நடுவர் வேலை செய்யாதீங்க...' எனக்கூறிய அசோக்குமாரின் ஆதரவாளர்கள், பழனிமாணிக்கத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுக்கூர் ஒன்றிய செயலரான இளங்கோ, அசோக்குமாரை ஒருமையில் பேசியதால், கோபமான அசோக்குமார், ''நீங்கள் ம.தி.மு.கவிலிருந்து வந்தவர்; உட்காருங்க...'' என, பதிலுக்கு பேச, பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
பின், பழனிமாணிக்கம் அனைவரையும் சமாதானம் செய்து வைத்து, கூட்டத்தை முடித்தார்.