புதுடில்லி, புதுடில்லி நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசின் அவசர சட்டம் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்றும், கெஜ்ரிவாலுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்பதால், உடனடியாக எந்த முடிவையும் அறிவிக்க, காங்கிரஸ் தலைமை தயங்குகிறது.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
![]()
|
மாநில நிர்வாகம் தொடர்பான வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 'சட்டம் - ஒழுங்கு, போலீஸ், நிலம் தவிர்த்த மற்ற நிர்வாக விவகாரங்களில் முடிவெடுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது' என, குறிப்பிட்டு உள்ளது.
இந்நிலையில், துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டத்தை அமல்படுத்திஉள்ளது.
இந்த அவசர சட்ட மசோதா பார்லிமென்டில் தாக்கலாகும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்படி, பல மாநில கட்சித் தலைவர்களை சந்தித்து, அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கேட்டு வருகிறார்.
விமர்சனம்
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரான, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரை சந்தித்தார்.
இதற்கிடையே, அடுத்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகள் கூட்டணியை அமைக்கும் முயற்சியில், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பேசினார். அப்போது, அவசர சட்ட விவகாரத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் ஆதரவு தெரிவித்தார்.
ஆனால், பார்லிமென்டில் காங்கிரஸ் முன்னெடுத்த பல போராட்டங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டங்களில் பங்கேற்காமல் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து புறக்கணித்து வந்தார்.
புதுடில்லி, பஞ்சாப், குஜராத், ஹிமாச்சல பிரதேசம், கோவா என பல மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில், காங்கிரசை பின்னுக்கு தள்ளி, ஆம் ஆத்மி வளர்ந்துள்ளது. அதனால், பா.ஜ.,வின் 'பி டீம்' என, அந்தக் கட்சியை காங்கிரஸ் விமர்சித்து வந்தது.
இந்நிலையில், அவசர சட்ட விவகாரத்தில் ஆதரவு கேட்பதற்காக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுலை சந்திக்க, அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கேட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக கார்கே கூறியிருந்தார்.
இதன்படி புதுடில்லி மற்றும் பஞ்சாப் மாநில நிர்வாகிகளுடன், கார்கே நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், ராகுலும் பங்கேற்றார்.
இதில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளதாவது:
புதுடில்லி, பஞ்சாப் உட்பட பல மாநில சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் சரிவுக்கு ஆம் ஆத்மியே காரணமாகும். அந்த மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பா.ஜ.,வுக்கான ஓட்டுகளைவிட, காங்கிரசின் ஓட்டுகளையே ஆம் ஆத்மி பிரித்துள்ளது.
அவசர சட்டம்
மேலும், காங்கிரஸ் நடத்திய பல போராட்டங்களில் பங்கேற்காமல் ஆம் ஆத்மி புறக்கணித்துள்ளது. அந்தக் கட்சி பா.ஜ.,வின் பி டீமாகவே செயல்பட்டு வருகிறது. அதனால், அதற்கு அளிக்கும் ஆதரவு, பா.ஜ.,வுக்கு அளிக்கும் ஆதரவாகவே இருக்கும்.
அதனால், இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்கக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளதாவது:
அவசர சட்டம் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் நிச்சயம் பரிசீலனை செய்யப்படும்.
அடுத்த சில நாட்களில் இதில் உறுதியான முடிவு எடுப்போம். அதன்பிறகே, கார்கேவை சந்திப்பதற்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரம் கொடுப்பது குறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவசர சட்டம் விவகாரத்தில் ஆதரவு அளிப்பதுடன், அடுத்த லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பதற்கும், காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ஆதரவு அளிக்க மறுத்தால், வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பாதிப்பு ஏற்படும் என்பதால், உடனடியாக தன் முடிவை அறிவிக்க காங்கிரஸ் தலைமை தயங்குகிறது.
அதே நேரத்தில் கட்சியினரின் எதிர்ப்பையும் நிராகரிக்க முடியாத நிலையில் கட்சித் தலைமை உள்ளது.