வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற, சிறுதானியங்கள் குறித்த கருத்தரங்கில் பேசிய, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், 'ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கடவுள் முருகன் தினை மாவு சாப்பிட்டார். மேலும், முருகன் செய்தது இரண்டு திருமணமா அல்லது மூன்று திருமணமா' என்றும் கிண்டலாக பேசி, ஹிந்துக்களை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்துள்ளார்.
சிறுதானியம் குறித்த கருத்தரங்கம் என்பதால், 'ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கடவுள் முருகன், தினை மாவு சாப்பிட்டார்' என்று பேசியதில் தவறில்லை; முருகனின் திருமணம் குறித்து பேசி வம்புக்கு இழுத்தது தான் தவறானது.
![]()
|
திராவிடச் செம்மல்களால் பெரிதும் போற்றப்படும் ஈ.வெ.ரா., 'கடவுளை நம்புவதே மூடத்தனம்' என்று, ஒட்டு மொத்தமாகக் கூறினாரே தவிர, 'ஹிந்து மதத்தினரின் கடவுள் நம்பிக்கை மட்டுமே தவறானது; மற்ற மதத்தினரின் கடவுள் நம்பிக்கை தவறானதல்ல' என்று பகுத்து கூறவில்லை.
சமீபத்தில், ஆப்ரிக்க நாடு ஒன்றில், 'பட்டினி கிடந்து பிரார்த்தனை செய்தால் இறைவனை காணலாம்' என, பாதிரியார்கள் கூறியதை நம்பி, பலர் பட்டினி கிடந்து, தங்களின் இன்னுயிரை மாய்த்துள்ளனர். அதுபற்றி திராவிடச் செம்மல்கள் பேச மாட்டார்கள். அதுபோலவே, கோவை குண்டு வெடிப்பை, சிலிண்டர் வெடிப்பு என்று கூறி மழுப்பினர். இதற்கெல்லாம் காரணம், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களின் ஓட்டுகள் குறைந்து விடும் என்ற பயமே காரணம்.
ஒன்று மட்டும் நிச்சயம்... ஹிந்து மதத்திற்கு எதிராக, ஹிந்துக்களுக்கு எதிராக இவர்கள் என்ன பேசினாலும், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை; மாறாக வெளிநாடுகளிலும், ஹிந்து மதம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கடவுள் முருகன் எத்தனை திருமணம் செய்தார் என்பது பற்றி கிண்டலடித்த அமைச்சர் பன்னீர்செல்வம், தங்கள் கட்சியின் தலைவர்கள் எத்தனை திருமணம் செய்தனர் என்பது பற்றி பேசும் துணிவிருக்கிறதா... அப்படி பேசினால், பதவி பறிபோய்விடும் என்ற பகுத்தறிவு தடுக்கிறதல்லவா?
நடுநிலையோடு செயல்படாமல், ஓட்டுக்காக சில பிரிவினரை மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கும் அணுகுமுறையை, கழக ஆட்சியாளர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அதை விடுத்து, தொடர்ந்து ஹிந்துக்களை மற்றும் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிக் கொண்டிருந்தால், தமிழகத்தில் ஆட்சிக்கு வர, பா.ஜ.,வினர் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமே இல்லை. காலப்போக்கில் தமிழகத்தில் தாமரை தானே மலர்ந்து விடும்; அப்போது, திராவிடச் செம்மல்களின் கொட்டமும் அடங்கி விடும்.