வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருச்சி மாவட்ட தி.மு.க.,வில், அமைச்சர்கள் நேரு, மகேஷ் மற்றும் எம்.பி., சிவா ஆகியோரின் ஆதரவாளர்கள், தனித்தனி கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். கருணாநிதி காலத்தில் இருந்தே, ஒட்டுமொத்த திருச்சி மாவட்ட தி.மு.க.,வை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர், நேரு.
தற்போது, அமைச்சர் மகேஷின் வளர்ச்சியும், ஆதிக்கமும், அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. கட்சியிலும் ஆட்சியிலும் செல்வாக்கு மிக்கவராக, மகேஷ் இருப்பதால், திருச்சி தி.மு.க.,வில், அவருக்கென ஆதரவு வட்டம் உருவாகி உள்ளது.
இதனால், நேரு தயவால் 'சீட்' வாங்கி, வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் கூட, தற்போது அவரது வட்டத்தில் இருந்து வெளியேறி, மகேஷிடம் கைகோர்த்துள்ளனர். அதனால், நேருவுக்கு எதிராக திரும்பியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட யாரையும், அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை.
![]()
|
அவர்களை புறக்கணிக்கும்படி, கட்சியினருக்கும், அதிகாரி களுக்கும், நேரு தரப்பில் உத்தர விடப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலத்தை, அமைச்சர் நேரு, நேற்று திறந்து வைத்தார். காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் பங்கேற்றார். ஆனால், அமைச்சர் மகேஷ், அவரது ஆதரவாளரான எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் ஆகியோர் அழைக்கப்படவில்லை.
கடந்த மார்ச் மாதம், இதேபோல் அரசு நிகழ்ச்சிக்கு எம்.பி., சிவா அழைக்கப்படாததால், அவரது ஆதரவாளர்கள், பிரச்னையை கிளப்பினர். நேரு ஆட்களுக்கும், சிவா ஆதரவாளர்களுக்கும் இடையே அடிதடி ஏற்பட்டு, போலீஸ் நிலையம் வரை விவகாரம் சென்றது.
நேருவை தவிர, திருச்சியில் யாரையும் வளர விடாத நிலை இருப்பதால், மகேஷ் ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் இருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -