சென்னை: சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகளிடம், கட்டாய கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை நகல், நேற்று கவர்னர் ரவியிடம் வழங்கப்பட்டது.
தீட்சிதர்கள் குடும்பத்தில் குழந்தைகள் திருமணம் நடந்ததாக வந்த புகார் அடிப்படையில், பெற்றோர் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட சிறுமியரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று, 'இரு விரல்பரிசோதனை' எனப்படும் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. ஆணைய உறுப்பினர் ஆனந்த் தலைமையிலான குழு, நேரில் விசாரணை நடத்தியது.
விசாரணை அறிக்கை நகலை, ஆணைய உறுப்பினர் ஆனந்த் நேற்று கவர்னர் ரவியை சந்தித்து வழங்கினார். 132 பக்க அறிக்கை நகலுடன், இரண்டு 'பென் டிரைவ்'கள், சில புகைப்படங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில், தீட்சிதர் குடும்பங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது உண்மை என, விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.