சிக்கமகளூரு-தரிகெரேவில், ராணுவ வீரர் ஒருவர் விபத்தில் இறந்தார். இவரது மொபைல் போன், வாட்ச், ஹெல்மெட்டை கண்டுபிடித்து தரும்படி, போலீசாரிடம் பெற்றோர் மன்றாடுகின்றனர்.
சிக்கமகளூரு, தரிகெரேவின், தனிகேபைலு கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக், 22. இவர் 2018ல் ராணுவத்தில் சேர்ந்தார். பணிக்கு சேர்ந்த நான்கே ஆண்டில், 'பிளாக் கேட்ஸ் கமாண்டோ'வாக உயர்ந்தார். இவருக்கு, 2020ல் திருமணம் நடந்தது.
சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். சில நாட்களுக்கு முன் துமகூரு, குனிகல்லின், ஹேமாவதி கிராஸ் அருகில் பைக்கில் செல்லும் போது, லாரி மோதியதில், தீபக் பலியானார். சகல ராணுவ மரியாதையுடன், இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. விபத்தின் போது, தீபக் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம், பணம் உட்பட மற்ற பொருட்களை, பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது.
தங்களுக்கு பணமோ, தங்க நகைகள் தேவையில்லை. மகனின் மொபைல் போன், கைக்கடிகாரம், ஹெல்மெட்டை மட்டும், கண்டுபிடித்து தரும்படி போலீசாரிடம், அவரது பெற்றோர் மன்றாடுகின்றனர்.
தன் மொபைல் போனில், ராணுவத்தின் 'சீக்ரெட் கோட்' உள்ளதாக, பெற்றோரிடம் தீபக் கூறியிருந்தாராம். ஹெல்மெட்டில் கேமரா இருந்தது. இதை பார்த்தால், மகனின் இறப்புக்கு காரணம் தெரியவரலாம்.
தீபக்கின் மொபைல் போனை, விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் எடுத்து சென்றுள்ளார். போலீசார் நினைத்திருந்தால், அதன் லொகேஷனை வைத்து, கண்டுபிடித்திருக்கலாம். இதில் அவர்கள் அக்கறை காண்பிக்கவில்லை.
எனவே இவற்றை கண்டுபிடித்து தரும்படி, அவரது பெற்றோர், போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் போலீசார், அந்த பொருட்களை தேடி அலைய முடியாது என, கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.