வர்த்துார்-விநாயகர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு வர்த்துாருக்கு உட்பட்ட ஹொசஹள்ளி பிரதான சாலை ஓரத்தில், திறந்தவெளியில் விநாயகர் கோவில் உள்ளது. நேற்று காலை அப்பகுதியில் வசிப்பவர்கள் சுவாமியை தரிசிக்க வந்த போது, விநாயகரின் முகம் உடைக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், வர்த்துார் போலீசில் புகார் அளித்தனர். அங்கு வந்த போலீசார், சிலையை, துணியால் மூடினர். பின், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில், கோவில் அருகில் வந்த மர்ம நபர், சுற்றும் முற்றும் பார்த்த பின், தன் கையில் வைத்திருந்த சுத்தியலால், விநாயகர் சிலையை பலமுறை அடித்ததால், உடைந்து விழுந்தது தெரிந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. சிலையை உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.