மங்களூரு,-''மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய, இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள, அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்,'' என சபாநாயகர் காதர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தட்சிண கன்னடா, மங்களூரு நகரின், விருந்தினர் மாளிகையில், மழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, அதிகாரிகளுடன் சபாநாயகர் காதர், நேற்று ஆலோசனை நடத்தினார்.
அவர் பேசியதாவது:
மழைக் காலத்தில் ஏற்படும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள, அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மூழ்கும் பகுதிகள், மண் சரிவு ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுப்பாட்டு அறைகளை திறக்க வேண்டும். மழை நிவாரண பணிகளுக்கு உள்ளாட்சிகளின் ஒத்துழைப்பை பெற வேண்டும். வனத்துறையினர், மெஸ்காம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அதிகாரிகளின் அலட்சியத்தால், உயிர்ச்சேதம் ஏற்பட்டால், வனம் மற்றும் மெஸ்காம் அதிகாரிகளே, பொறுப்பாளி ஆக்கப்படுவர். வீடுகள் சேதமடைந்தால், உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.