மைசூரு-சுற்றுலா சென்று விட்டு காரில் திரும்பிய போது, தனியார் பஸ் மீது எதிர்பாராத விதமாக மோதியதில், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேரும், கார் டிரைவரும் பலியாயினர். மைசூரு அருகே நடந்த கோர விபத்தில், இறந்தவர்களின் உடல் உறுப்புகள் சிதறி கிடந்த காட்சி, கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
மைசூரு மாவட்டம், டி.நரசிப்பூர் தாலுகா குருபூர் பகுதியில், நேற்று மதியம் 2:50 மணிக்கு இன்னோவா கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே சாம்ராஜ் நகரில் இருந்து மைசூரு நோக்கி, தனியார் பஸ் வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் காரும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கார் உருக்குலைந்தது. பஸ்சின் முன்பகுதியும், பலத்த சேதம் அடைந்தது. தகவலறிந்து, கிராம மக்கள் அலறி அடித்து ஓடி வந்தனர்.
விபத்தில் சிக்கிய காருக்குள் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு சிறுவன் உட்பட மூன்று பேரை மீட்டு, சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
10 பேர் பலி
டி.நரசிப்பூர் போலீசார், தீயணைப்பு படையினர் வந்தனர். இடிபாடுகளில் சிக்கி, எத்தனை பேர் இறந்தனர் என்பதை கண்டறிய முடியவில்லை. அந்த அளவிற்கு கார் சின்னாபின்னமாகி கிடந்தது.
உடல்களை வெளியே எடுக்க முடியாத சூழலில், இரும்பு வெட்டும் இயந்திரத்தின் மூலம், காரின் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. இதையடுத்து காரில் இறந்து கிடந்தவர்களின் உடல்கள், ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டன. சிலரது கை, கால்கள் துண்டாகி காணப்பட்டது. சிலரது உறுப்புகள் சிதைந்திருந்தன.
மொத்தம், 10 உடல்களை எடுத்தனர். போலீசார் விசாரணையில், பல்லாரி தாலுகா சங்கனகல் கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத், 35, இவரது மனைவி பூர்ணிமா, 30, இந்த தம்பதியின் மகன்கள் பவன், 10, கார்த்திக், 8. கொட்ரேஷ், 45, இவரது மனைவி சுஜாதா, 40, தம்பதியின் மகன் சந்தீப், 24, காயத்ரி, 35, இவரது குழந்தை ஸ்ரவ்யா, 3; கார் டிரைவர் ஆதித்யா, 26 என்பது தெரிந்தது. படுகாயம் அடைந்தவர்கள் ஜனார்த்தன், 45, சசிகுமார், 24, புனித், 4 என்றும் தெரியவந்தது.
பிரதமர், முதல்வர் இரங்கல்
விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த 12 பேரும் பல்லாரியில் இருந்து மைசூருக்கு, நேற்று முன்தினம் ரயிலில் வந்தனர். மைசூரில் வாடகை கார் எடுத்து சுற்றிப் பார்த்தனர்.
நேற்று காலை, சாம்ராஜ் நகர் மாவட்டம், பிளிகிரிரங்கன பெட்டாவுக்கு வாடகை காரில் சுற்றுலா சென்றனர். அங்கு இருந்து மைசூருக்கு திரும்பி வந்த போது தான் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில், பஸ்சில் பயணம் செய்தவர்களில் 16 பேர் காயம் அடைந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்து உள்ளார். இவர்கள் குடும்பங்களுக்கு, தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு, பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.
விபத்தில் பலியான 10 பேரும், மைசூரில் இருந்து பல்லாரி செல்லும் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். நேற்று மாலை 5:00 மணிக்கு ரயில் ஏற இருந்தனர். ஆனால் பகல் 2.50 மணிக்கு விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். 10 பேர் இறந்ததால், சங்கனகல் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.