துமகூரு-சித்தகங்கா மடத்திற்கு பா.ஜ., ஆட்சியில் ஒதுக்கிய, 10 கோடி ரூபாய் நிதியை காங்கிரஸ் அரசு நிறுத்தி வைத்திருப்பதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா குற்றம் சாட்டியுள்ளார்.
துமகூரு ரூரல் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா நேற்று அளித்த பேட்டி:
துமகூரு சித்தகங்கா மடத்தில் தங்கும் விடுதி கட்ட, பா.ஜ., ஆட்சியில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியை காங்கிரஸ் அரசு, வேண்டும் என்றே நிறுத்தி வைத்துள்ளது. எனது தொகுதிக்கு வர வேண்டிய, 20 கோடி ரூபாய் நிதியையும் நிறுத்தி வைத்துள்ளனர்.
அரசு ஒதுக்கிய நிதியில் ஊழல் செய்தால், அதை தடுத்து நிறுத்துங்கள். தேவையின்றி நிறுத்தி வைப்பது சரியல்ல. சித்தகங்கா மடத்திற்கு அரசு, விரைவில் நிதியை விடுவிக்கும் என்று நம்புகிறேன். அப்படி செய்யாவிட்டால், தெருவில் இறங்கி போராடுவேன்.
வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றுகின்றனர். கர்நாடக மக்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு லோக்சபா தேர்தலில், மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அவர்கூறினார்.