பெங்களூரு-''பெங்களூரு மாநகராட்சி கடல் போன்றது. எங்கு மிதக்கிறது, எங்கு மூழ்குகிறது என்பது தெரியவில்லை. எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் ஒடுக்கப்படுவர். ஊழலற்ற மாநகராட்சி, மக்கள் நல மாநகராட்சியாக உருவாக்குவதே அரசின் நோக்கம்,'' என துணை முதல்வர் சிவகுமார் எச்சரிக்கை விடுத்தார்.
அனைத்து அமைச்சர்களுக்கும் நேற்று முன்தினம் நள்ளிரவு தான் துறைகள் ஒதுக்கப்பட்டன. துணை முதல்வர் சிவகுமாருக்கு, நீர்ப்பாசனம், பெங்களூரு நகர வளர்ச்சி துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
துறை ஒதுக்கிய முதல் நாளிலேயே, பறந்து, பறந்து ஆலோசனை நடத்தினார். நேற்று காலை, தான் படித்த ராஜாஜிநகர் நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு சென்று, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
முக்கிய ஆலோசனை
பின், பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ் சிங், தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சிவகுமார் பேசியதாவது:
பெங்களூரில் மூன்று ஆண்டுகளாக எந்தெந்த சட்டசபை தொகுதிகளில், என்னென்ன பணிகள் நடந்துள்ளன; செலவு விபரம்; பணிகளுக்கான படங்கள், வீடியோக்களை எனக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கப்படாத மாநகராட்சியின் கீழ் நடக்கும் அனைத்து பணிகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பணிகள் நடக்காமல் நிதி வழங்கியது, ஒரே பணிக்கு இரண்டு முறை நிதி வழங்கியது போன்றவற்றை விசாரித்து, 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
நீங்கள் யாருக்கு நேர்மையாக உள்ளீர்கள் என்பதை வெளியில் பார்த்துள்ளேன். நீங்கள் பட்டியல் வழங்கவில்லை என்றால், நானே உங்களுக்கு பட்டியல் தருகிறேன். நான் கிராமத்தில் இருந்து வந்தவன். எனக்கு தகவல் கொடுப்பவர்கள் பலர் உள்ளனர்.
ஆய்வு செய்வோம்
தகவல் பெறும் அளவுக்கு எனக்கு பலம் உண்டு. எங்கெங்கு பணிகள் நடந்துள்ளன என்பதை அனைவரும் சேர்ந்து ஆய்வு செய்வோம். கண்ணால் பார்த்தால் மட்டுமே நம்புவேன். எனவே நேராக சென்று கண்களால் பார்ப்போம்.
சாலை உட்பட பல பணிகளை ஏன் தனியார் ஏஜன்சிகள் மூலம் நடத்துகிறீர்கள். அப்படியானால், மாநகராட்சி பொறியாளர்கள் இருப்பது எதற்கு. உங்கள் பணியை நீங்கள் செய்யவில்லை என்றால், தேவையே இல்லையே.
கண்ட இடங்களில் குப்பை கொட்ட அனுமதி தரக் கூடாது. மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். திட, திரவ கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒடுக்கப்படுவர்
மழை காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில், பாதிப்பு பகுதிகளை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்க எடுக்க வேண்டும். பெங்களூரு மாநகராட்சி கடல் போன்றது. எங்கு மிதக்கிறது, எங்கு மூழ்குகிறது என்பது தெரியவில்லை. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இணைந்து என்னென்ன செய்கின்றனர் என்பது தெரியும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் ஒடுக்கப்படுவர்.
நல்ல வேலை செய்து, நல்ல பெயர் எடுத்து கொள்ளுங்கள். அரசுக்கும் நல்ல பெயர் வாங்கி தாருங்கள். இப்போதே திருந்துங்கள். ஊழலற்ற மாநகராட்சி, மக்கள் நல மாநகராட்சியை உருவாக்குவதே அரசின் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன்பின், பி.டி.ஏ., எனும் பெங்களூரு வளர்ச்சி ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நேற்று மாலை நடக்கவிருந்த நீர்ப்பாசன துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு தயாராகும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வார்டு மறுவரையறை தொடர்பாக அமைச்சர் ராமலிங்கரெட்டி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவர் ஆய்வு செய்வார்,'' என்றார்.