பெங்களூரு-தேர்தலுக்கு முன் அறிவிக்கப்பட்ட இலவச வாக்குறுதி திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக, பல்வேறு துறை அதிகாரிகளுடன், முதல்வர் சித்தராமையா நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். ஜூன் 1ல் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில், இது தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, '200 யூனிட் இலவச மின்சாரம்; குடும்ப தலைவியருக்கு மாதம் 2,000 ரூபாய்; பி.பி.எல்., ரேஷன் கார்டு குடும்பங்களில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி.
'வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம், 3,000 ரூபாய் மற்றும் டிப்ளமா படித்தவர்களுக்கு 1,500 ரூபாய் ஊக்கத்தொகை; மகளிருக்கு அரசு பஸ்களில் இலவச பயணம்' ஆகிய ஐந்து முக்கியமான வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்தது.
முதல்வர் உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் பதவியேற்ற பின் நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில், இந்த திட்டங்களை நிறைவேற்ற கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், என்று முதல் இலவச திட்டங்களை அமல்படுத்துவது என்பது குறித்து, அரசு எதுவும் தெரிவிக்கவில்லை.
இதனால், பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் அரசை விமர்சித்து வருகின்றனர். மக்களும், 'பஸ்களில் டிக்கெட் வாங்க மாட்டோம்; மின் கட்டணம் செலுத்த மாட்டோம்' என, சில இடங்களில் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், இலவச வாக்குறுதிகளை விரைந்து அமல்படுத்த வேண்டிய நெருக்கடி, காங்கிரஸ்அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நிதி, போக்குவரத்து, உணவு மற்றும் பொது வினியோகம், மின்துறை உட்பட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன், முதல்வர்சித்தராமையா நேற்று பெங்களூரில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதில், மாநில அரசின் தலைமை செயலர் வந்திதா ஷர்மா உட்பட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்று, திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை விளக்கினர். அப்போது, இலவச திட்டங்களை செயல்படுத்தும் விதிமுறைகள் குறித்து, விரிவான அறிக்கை தயாரிக்கும்படி முதல்வர் கேட்டுக் கொண்டார்.
திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக, அனைத்து அமைச்சர்களுடன் முதல்வர் சித்தராமையா, நாளை ஆலோசனை நடத்துகிறார். பின், ஜூன் 1ம் தேதி நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தில், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்பட உள்ளது.