வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் முகாமிட்டுள்ள அரிசிக்கொம்பன் யானை வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. உணவு கிடைக்காத ஆத்திரத்தில் 300 தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
அரிசி கொம்பன் காட்டு யானை மே 27 அதிகாலை கம்பத்திற்குள் புகுந்தது. பெரிய அளவில் பொருட்களுக்கு சேதமோ, ஆட்கள் மீது தாக்குதலோ நடத்தவில்லை. அன்று இரவே கம்பத்திலிருந்து வெளியேறி சுருளிப்பட்டி வழியாக மேகமலை சென்றது.
வனத்துறையினர் கம்பம் யானை கெஜம் பகுதிகளில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. வனத்துறையினருக்கு போக்கு காட்டி யானை மேகமலைக்கு சென்றது.
நேற்று முன்தினம் இரவு மீண்டும் யானை கெஜம், கூத்தனாட்சி வழியாக தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தங்கதமிழ்செல்வன் தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த 300 தென்னை மரங்களை சேதப்படுத்தியது.
சிக்னல் மூலம் தெரிந்து கொண்ட வனத்துறையினர், மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி, துணை இயக்குனர் ஆனந்த் தலைமையில் அங்கு முகாமிட்டனர். டாக்டர்கள் குழு மயக்க ஊசி செலுத்த தயாராகினர். அதே நேரத்தில் கம்பத்தில் உள்ள கும்கி யானைகள் தயார் நிலையில் இருந்தன.
ஆனால் சுதாரித்துக் கொண்ட அரிசி கொம்பன், டாக்டர்களை கண்டதும் அங்கிருந்து நைசாக வெளியேறியது. நடந்து செல்லும் போது மயக்க ஊசி செலுத்த முடியாது என்பதால் 'டிரேக்கிங் டீம்' ஊட்டி யானைகள் முகாமில் இருந்து வந்த சிறப்பு குழுவினர் பின் தொடர்ந்து சென்றனர். நேற்று காலை 10:30 மணிக்கு சண்முகநாதன் கோயில் வழியாக பத்துக்கூடு பகுதிக்கு சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கூடுதல் டாக்டர்கள் வருகை
அரிசி கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க டாக்டர் பிரகாஷ் தலைமையில் விஜயராமன், ராஜேஷ், கலைவாணன் உள்ளனர். ஏற்கனவே இந்த குழுவில் இருந்த டாக்டர்கள் செல்வம், சந்திரசேகரன் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்டத்தில் இருந்து வனஉயிரின சிறப்பு டாக்டர்கள் வந்துள்ளனர்.
உணவு கிடைக்காததால் சோர்வு
விரும்பி உண்ணும் அரிசி கிடைக்காததால் யானை சோர்வுடன் இருப்பதாகவும், கம்பத்திலிருந்து யானைகெஜம் சென்ற போது அன்று மட்டுமே சாணமிட்டுள்ளது. அதற்கு பின் சாணமிடவில்லை. இதனால் காலி வயிற்றுடன் நடமாடுவதாகவும், இதன் காரணமாக மலை ஏறாமல் மலையடிவாரங்களில் சுற்றி வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
பூஜை செய்த வனத்துறை
நேற்று காலை கூத்தனாட்சி மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள அரிசி கொம்பனை பிடிக்க கிளம்பிய வனத்துறையின் தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி ஆலோசனைப்படி அங்குள்ள கோயிலில் பூஜை செய்து புறப்பட்டனர். இப் பணியில் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படாமல் இந்த ஆப்பரேஷன் நடக்க வேண்டிக் கொண்டனர்.