திருவாடானை: 2017 முதல் கோயில்களுக்கு பாதயாத்திரை, சைக்கிளில் சென்று தரிசனம் செய்யும் சிவனடியாரை ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பொதுமக்கள் வரவேற்றனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் தோலிதார் பகுதியை சேர்ந்தவர் ராசிக்போலா 64. திருமணம் ஆகாத இவர் ஹிந்து மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர். இவர் இந்தியா முழுவதும் சைக்கிளில் சென்று கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அவருக்கு தேவையான உடைகளை சைக்கிளில் வைத்துள்ளார்.
அவர் கூறுகையில்,''மகாராஷ்டிராவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டதால் வேலையை ராஜினாமா செய்து விட்டு சைக்கிளில் ஆன்மிக யாத்திரை துவங்கினேன். 2017 முதல் யாத்திரை துவங்கி காஷ்மீர் லடாக், நர்மதை ஆற்றங்கரையில் 8000 கி.மீ., பாதயாத்திரை சென்றேன்.
தற்போது சைக்கிளில் இந்தியா முழுவதும் செல்கிறேன். சிவாலயங்களில் தரிசனம் செய்து விட்டு தற்போது தமிழகம் வந்துள்ளேன். இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிக கோயில்கள் உள்ளன,'' என்றார்.