வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள கடைகளில் பட்டு சேலைகள் வாங்க, தமிழகத்தின் பிற பகுதிகள், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் வெளியூர் வாடிக்கையாளர்களை, தனியார் கடைகளுக்கு அழைத்துச் செல்ல, கோவில்களின் வாசல்களிலும், காந்தி சாலை, பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களிலும், புரோக்கர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

புரோக்கர்கள் அழைத்துச் செல்லும் கடைகளில், காஞ்சிபுரம் பட்டு சேலை எனக் கூறி, வெளியூர் சேலைகள் மோசடியாக விற்கப்படுவது, பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. புரோக்கர்களால் வெளியூர் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதால், காஞ்சிபுரம் பட்டு சேலைகளின் மீதான மதிப்பு, வெளியூர்வாசிகளிடையே குறைவதாக, கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பிரச்னை
கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களை, வலுக்கட்டாயமாக புரோக்கர்கள் அழைப்பதால், கைத்தறி சங்க ஊழியர்களுக்கும், புரோக்கர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது. அப்போது, கைத்தறி சங்க ஊழியர்களை, புரோக்கர்கள் ஒன்றிணைந்து மிரட்டுவதாக, கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரத்தில் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், இதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
இதுகுறித்து கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரம் பட்டு சேலை என கூறி, வெளியூர் சேலைகளை விற்கின்றனர். அவை பட்டு சேலையே கிடையாது. வெளியூரிலிருந்து வாங்கி வந்த, சாதாரண சேலைகளை, 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை, மோசடியாக விற்கின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய கைத்தறி துறை அதிகாரிகள், எந்தவித அக்கறையும் செலுத்தாமல், வேடிக்கை பார்க்கின்றனர்.
நடவடிக்கை
கைத்தறி கூட்டுறவு சங்க கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை திசை திருப்பி, புரோக்கர்கள் பலர் வலுக்கட்டாயமாக அழைத்து செல்கின்றனர். அவற்றை தட்டிக் கேட்கும் சங்க ஊழியர்களை, புரோக்கர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டுகின்றனர். சில சமயங்களில் தாக்குகின்றனர். காஞ்சிபுரத்தில் புரோக்கர்களை ஒடுக்க, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.