வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'லஞ்சம் வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டது, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது 10 நாட்களில் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்' என்று, 'தினமலர்' செய்தியை சுட் டிக்காட்டி, மின் வாரிய விஜிலன்ஸ் டி.ஜி.பி., வன்னியப்பெருமாள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
'லஞ்சம் -என்னிடம் பறித்தனர்' எனும் சிறப்பு பகுதி, 'தினமலர்' நாளிதழில் திங்கள்தோறும் வெளியாகிறது. சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒவ்வொரு பணிக்கும், கோரிக்கைக்கும் பொதுமக்களிடம் எவ்வாறெல்லாம் அரசுத்துறைகளில் லஞ்சம் பறிக்கப்படுகிறது என்பதை, பாதிக்கப்பட்ட மக்களே எழுதும் சிறப்பு பகுதி இது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு லஞ்சம் கறக்கின்றனர் என்ற விவரமும் வெளியாகி வருகிறது. கடந்த 22ம் தேதி வெளியான இப்பகுதியில், மின் வாரியத்தில் ஒவ்வொரு 'வேலை'க்கும் எவ்வளவு லஞ்சம் வசூலிக்கப்படுகிறது என்ற பட்டியல் வெளியாகியிருந்தது.
இதையடுத்து, மின் வாரிய விஜிலென்ஸ் டி.ஜி.பி., வன்னிய பெருமாள், மின் வாரியத்தின் அனைத்து தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலர்கள், தலைமை தணிக்கை அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: எந்த ஒரு சேவை அளிக்கவும் லஞ்சம் பெறக்கூடாது என்று கடுமையான உத்தரவு இருந்தும், மின் இணைப்பு வழங்குவதற்கு மின் வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக தெரியவந்துள்ளது. இது மிகவும் கண்டிப்புடன் அணுக வேண்டிய ஒன்றாகும்.
தலைமை பொறியாளர்களும், மேற்பார்வை இத்தகைய செயல்பாடுகளை தடுக்க, அனைத்து பொறியாளர்களும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளுடன் இத்தகைய புகார்கள் அளிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மின் வாரியத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலர்கள், இத்தகைய புகார்களை விரிவாகவும், விரைவாகவும் விசாரணை நடத்தி, எழுத்துபூர்வமான ஆதாரங்களுடன் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் டி.ஜி.பி., வன்னிய பெருமாள் தெரிவித்துள்ளார்.