மின்கம்பம் சீரமைக்கப்படுமா?
காஞ்சிபுரம் ஒன்றியம், கீழம்பி, கிருஷ்ணாபுரத்தில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக, சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.
மழை நீர் தேங்கும் தரிசு நிலத்தில், இந்த மின்கம்பம் உள்ளது. மின்கம்பம் முற்றிலும் சாய்ந்து விழும் சூழல் உள்ளது. எனவே, சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தை சீரமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.பன்னீர்செல்வம், காஞ்சிபுரம்.
அடிப்படை வசதிகளற்ற ------கோவில்
உத்திரமேரூர் கைலாசநாதர் கோவிலுக்கு, சோமவாரம், பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை. இதனால், கோவிலை சுற்றியுள்ள வெளிப்புறத்தில் அசுத்தம் செய்கின்றனர். எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தி.சே.அறிவழகன், திருப்புலிவனம்
ஆக்கிரமிப்பு வாகனங்களால் நெரிசல்
ஸ்ரீபெரும்புதுார் - --சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, வண்டலுார்-- - வாலாஜாபாத் நெடுஞ்சாலை இணையும், நான்கு சாலை சந்திப்பில், ஒரகடம் பஜார் பகுதி உள்ளது.
இங்கு வணிக கடைகள், உணவகம், துணி கடைகள் உள்ளன. ஒரகடம் சிப்காட்டில், தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால், இங்கு, 'கால்டாக்சி' அதிகம் பயன்பாட்டில் உள்ளது.இப்பகுதிக்கு வரும் கார்கள், ஒரகடம் மேம்பாலத்தின் கீழும், நெடுஞ்சாலையை ஆக்கிரமித்தும், நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு வாகனங்களை, போலீசார் அகற்ற வேண்டும்.-
- கே.பாபி, ஒரகடம்.