ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, வடக்குப்பட்டு ஊராட்சியில், 4,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதுார் - --சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் இருந்து, வடக்குப்பட்டு செல்லும் சாலை, 3 கி.மீ., துாரம் உள்ளது.
மின் விளக்குகள் இல்லாத இந்த சாலையில், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளதால், கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
வடக்குப்பட்டில் சாலை விரிவாக்கம் பணி நடக்கிறது. இதனால், தாம்பரத்தில் இருந்து, வடக்குப்பட்டு வழியே குருவன்மேடு செல்லும் அரசு பேருந்து, நெடுஞ்சாலையில் பயணியரை இறக்கி விட்டு செல்கிறது. இதனால், 3 கி.மீ., துாரம் நடந்து, வடக்குப்பட்டு செல்ல வேண்டி உள்ளது.
இந்நிலையில், இந்த சாலையில் மின்விளக்கு இல்லாததால், வழிப்பறி சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, இந்த சாலையில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என, வடக்குப்பட்டு மக்கள் தெரிவித்தனர்.-