அணு மின் நிலையம், அனல் மின் நிலையம் போன்றவை சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்துவதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்றும், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத தூய ஆற்றல் என்றும் அழைக்கப்படும் சூரிய சக்தி ஆற்றலை திறம்பட பயன்படுத்த அனைத்து நாடுகளும் போட்டா போட்டி போடுகின்றன. 250 - 300 நாட்கள் வெயில் அடிக்கும் இந்தியா இத்தொழில்நுட்பத்தை எப்போதோ கையில் எடுத்து இன்று சூரிய மின் உற்பத்தியில் முன்னணி நாடாக உள்ளது. அது பற்றி அறிந்துகொள்வோம் வாருங்கள்.
சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படுவது எப்படி?
ஒரு வருடத்திற்கான உலகளாவிய மின் ஆற்றல் தேவையை, சூரியனிலிருந்து வரும் ஆற்றல் ஒரு மணி நேரத்தில் பூர்த்தி செய்யக்கூடியது. ஆனால் அதனைப் பயன்படுத்த பரந்த அளவிலான இடமும், சோலார் பேனல்களும், பல ஆயிரம் கோடி முதலீடுகளும் தேவை. ஒரு முறை முதலீடு செய்து பல ஆண்டுகள் அதன் பலனை அனுபவிக்கலாம். சோலார் பவர் பிளான்டுகள், சோலார் பேனல்களின் போட்டோவோல்டாயிக் விளைவைப் பயன்படுத்தி ஒளி ஆற்றலை மின்சாரமாக மாற்றுகின்றன.
சீனா முதலிடம்
கடந்த சில ஆண்டுகளில் ஒரு சோலார் பேனலின் விலை வியக்கத்தக்க வகையில் 99% குறைந்துள்ளது. இதனால் சோலார் பூங்காக்கள் நிறுவுவது லாபகரமானதாக உள்ளது. 2023 நிலவரப்படி, 300,000 மெகாவாட் திறன் உடன், உலகளாவிய சூரிய ஆற்றல் உற்பத்தியில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வாருங்கள் உலகின் 10 மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் குறித்து பார்ப்போம்.
1. பத்லா சோலார் பூங்கா, ராஜஸ்தான், இந்தியா
![]()
|
இது தான் உலகின் மிகப் பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம். ராஜஸ்தானில் 21.8 சதுர மைல் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இது, 2,245 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இது நான்கு கட்டங்களாக உருவாக்கப்பட்டது. எல்&டி, பி.கே.டோசி போன்ற நிறுவனங்கள் ஒருங்கிணைந்து இதனை கட்டமைத்தன. இத்திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டது.
2.ஹைனன் சோலார் பூங்கா, சீனா
![]() Advertisement
|
இந்த சூரிய மின் உற்பத்தி நிலையம் 2020ல் கட்டி முடிக்கப்பட்டது. சீனாவின் கிங்காய் மாகாணத்தில் அமைந்துள்ளது. இது தான் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் பட்டியலில் முன்னர் முதலிடத்தை பிடித்திருந்தது. அதனை இந்தியா தட்டி தூக்கிவிட்டது. இந்த மின் உற்பத்தி நிலையம் 2,200 மெகாவாட் திறன் கொண்டது. மேலும் காற்றாலை மின் உற்பத்திக்கான வசதிகளும் உண்டு. இதனால் ஹைட்ரோபவர் நிலையம் என இதனை குறிப்பிடுகின்றனர். இத்திட்ட மதிப்பு ரூ.18 ஆயிரம் கோடி.
3. பாவ்கடா சோலார் பூங்கா, கர்நாடகா, இந்தியா
![]()
|
2,050 மெகாவாட் திறன் கொண்ட இந்த பாவகடா சோலார் பூங்கா, உலகின் மூன்றாவது மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம். இந்திய அளவில் இரண்டாவது பெரியது. மொத்தம் 20.3 சதுர மைல் பரப்பளவில் பரவியுள்ளது.
கர்நாடகா மாநில புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மற்றும் இந்திய சூரிய ஆற்றல் கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இது விளைந்துள்ளது. இந்த சோலார் பூங்காவை கட்டமைக்க 18 மாதங்கள் ஆனது. இத்திட்டத்திற்கு ரூ.17,000 கோடி செலவு ஆனது.
4. பென்பன் சோலார் பார்க், எகிப்து
![]()
|
14 சதுர மைல் பரப்பளவில், 1,650 மெகாவாட் திறன் கொண்ட பென்பன் சோலார் பார்க் நான்காவது பெரிய சூரிய மின் நிலையமாகும். இந்த சோலார் பூங்கா எகிப்தில் தரிசு நிலமான கிடந்த மேற்குப் பாலைவனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள், தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் செய்கிறது.
5.டெங்கர் பாலைவன சோலார் பார்க், சீனா
சீனாவின் பெரிய பாலைவனத்தில் அமைந்துள்ள சோலார் பார்க் இது. 1,547 மெகாவாட் திறன் கொண்ட இது, சீனாவின் இரண்டாவது பெரியது மற்றும் உலகின் ஐந்தாவது பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம். இந்த சோலார் பூங்கா 15.6 சதுர மைல்களுக்கு மேலான பரப்பளவைக் கொண்டுள்ளது. 2015ல் இது செயல்பாட்டுக்கு வந்தது. சுமார் 6 லட்சம் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குகிறது.
6. நூர் அபுதாபி, யு.ஏ.இ.,
நூர் அபு தாபி சோலார் பார்க் உலகளவில் 6வது இடம் பிடித்தாலும், உலகின் மிகப்பெரிய ஒற்றை-தள மின் உற்பத்தி நிலையம் இது. மேலும் பேனல்களை சுத்தமாக வைத்திருக்க ரோபோக்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மைல்கள் பயணிக்கின்றன. அதுவும் தண்ணீரின்றி சுத்தம் செய்கின்றன. இந்த வசதி உலகிலேயே முதல் முறையாக இங்கு தான் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையம் 1,177 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
7. முகமது பின் ரஷித் அல் மக்தூம் சோலார் பூங்கா, யு.ஏ.இ.,
அரபு எமிரேட்ஸின் துபாய் நகருக்கு அருகே இந்த மின் நிலையம் உள்ளது. 1,013 மெகாவாட் திறன் கொண்டது. உலகின் ஏழாவது பெரிய சூரிய மின் நிலையம். பாலைவனத்தில் மொத்தம் 30 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ளது. 15 மணி நேரம் சேமிப்புத் திறனுடன் இருப்பதால், இந்த ஆலை தொடர்ந்து ஆற்றலை உற்பத்தி செய்யும்.
8. கர்னூல் அல்ட்ரா மெகா சோலார் பூங்கா, இந்தியா
2019ல் இருந்து செயல்பாட்டில் உள்ள இந்த சோலார் பூங்கா உலகப் பட்டியலில் இடம்பெறும் மூன்றாவது சோலார் பார்க். ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த ஆலை 9.37 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. 45.8 லட்சம் சோலார் பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கர்னூல் மாவட்டத்திற்கு 80% மின்சாரம் இந்த சோலார் பூங்கா மூலம் வழங்கப்படுகிறது.
9. டடோங் சோலார் பூங்கா, சீனா
![]()
|
இதுவும் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட சோலார் பூங்கா. இது 0.39 சதுர மைல் பரப்பளவில் ராட்சத பாண்டா போன்று தோன்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
10.என்.பி., குண்டா சோலார் பூங்கா, ஆந்திரா, இந்தியா
உலகளவில் 10வது பெரிய சோலார் பார்க்கும், இந்தியளவில் 4வது பெரிய சோலார் பூங்காவுமான இது 978.5 மெகாவாட் திறன் கொண்டது. 12 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் மே 2016ல் தொடங்கப்பட்டது.