திருப்பூர் மாவட்டம் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகம் 39 கிராமங்களை உள்ளடக்கியது. தினசரி நூற்றுக்கும் அதிகமான பத்திரங்கள் இங்கு பதிவாகின்றன.சமீப நாட்களாக, இங்கு, லஞ்ச ஊழல் அதிகரித்துள்ளதாக பத்திர எழுத்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், ' பல்லடம் பத்திர அலுவலகத்தில் பத்திரங்களின் மதிப்புக்கு ஏற்ப லஞ்சம் எவ்வளவு என்பதை நிர்ணயிக்கப்படுகிறது ஒருவர் கொடுக்கும் பத்திரத்தை பதிவு செய்ய முடியாது என்று கூறிவிட்டு, அதே பத்திரத்தை வேறொருவர் மூலம் பதிவு செய்கின்றனர். எனில் இதற்கான காரணம் என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. கையூட்டு தரவில்லை என்றால் வேண்டுமென்றே பத்திரங்களை பதிவு செய்யாமல் எழுத்தடிப்பதும் பல்வேறு காரணங்களை கூறி நிராகரிப்பதும் வாடிக்கையாக உள்ளது. இது குறித்து கேட்டால் முக்கியமான ஆவணம் (பேப்பர்) இல்லை என்கின்றனர். பத்திர எழுத்தர்களுக்கு இங்கு உரிய மரியாதை கிடையாது. குற்றச்சாட்டுகள் சுமத்தினால் பழி வாங்கும் நடவடிக்கை இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் சம்பவம் கைமீறி போய்விட்டது.
நில மதிப்புக்கு மேல் லஞ்சம் கேட்டால் நாங்கள் எங்கு செல்வது. லட்சம் கோடிகளில் லஞ்சம் கேட்பதால், பத்திரம் செய்ய வருபவர்கள் எங்கள் மேல் சந்தேகப்படுகின்றனர். இதனால் பத்திரங்களை வாபஸ் பெற்று செல்வதால் தொழில் பாதிக்கப்படுகிறது இதன் காரணமாகவே, பல்லடத்துக்கு பத்திர பதிவாளர்கள் போட்டி போட்டு மாறுதலாகி இங்கு வருகின்றனர். ஊழல் முறைகேடு புகார் எழுந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது. ஆனால், பல நாட்களாக பல்லடம் பத்திர அலுவலகத்தில் நடந்து வரும் ஊழல் முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுகொள்ளாமல் உள்ளது. ஏற்கனவே இரண்டு முறை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ய முயன்றனர். ஆனால் இந்த தகவல் இங்குள்ளவர்களுக்கு ஏற்கனவே தெரிந்து விட்டதால் அச்சமயத்தில் அலுவலகத்தில் இல்லாமல் மாயமாகிவிட்டனர்.
பத்திர எழுத்தர்களுக்கு மரியாதை தராமல் கட்டாயப்படுத்தி லஞ்சம் வாங்க நினைக்கும் பத்திரபதிவாளர்களை கண்டித்து விரைவில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். அதிலும் திருந்தாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் என்றனர்.