ஐதராபாத்: தெலுங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், பல்வேறு அரசு பணிகளுக்கான எழுத்து தேர்வு நடந்தது.

இதில், உதவி செயற்பொறியாளர், மண்டல கணக்கு அதிகாரி பணியிடங்களுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாக, மார்ச் மாதம் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, அம்மாநில சிறப்பு புலனாய்வுக்குழு போலீசாா் விசாரித்து வருகின்றனர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
போலீசார் கூறியுள்ளதாவது: தெலுங்கானா மாநில மின்வினியோக நிறுவனத்தில் மண்டல பொறியாளராக பணியாற்றி வரும் பூலா ரமேஷ் என்பவர், இரண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்களை விற்றுள்ளார், தேர்வு எழுதிய ஏழு பேருக்கு, சாட் ஜிபிடி வாயிலாக விடையை கண்டுபிடித்து கூறியுள்ளார். இதற்காக, ஏழு பேரும் தேர்வறையில் ‛ப்ளூ-டூத் இயர் பட்ஸ்'கள் பயன்படுத்தி உள்ளனர்.
இதன்படி, சம்பந்தப்பட்ட தேர்வர்கள் பிரசாந்த், நரேஷ், மகேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகியோர், நேற்று (மே.,29)ம் தேதி, கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வறைக்குள், மின்னணு சாதனங்கள் எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து, விசாரித்து வருகிறோம். இவ்வழக்கில், 49 பேர் இதுவரை, கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச்.,5ம் தேதி நடந்த, மற்றொரு தேர்வில், உதவி பொறியாளர் பூலா ரவி கிஷோரிடம் இருந்து, வினாத்தாளை பெற்ற ரமேஷ், அதை, 25 பேருக்கு விற்றுள்ளார். இதற்காக, வினாத்தாள் ஒன்றுக்கு, ரூ. 25 முதல் 30 லட்சம் வரை, கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும், மகபூபா மாவட்டத்தைச் சேர்ந்த, 15 பேர் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடக்கிறது .இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இந்த விவகாரத்தில், தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், ஜனார்த்தன ரெட்டி, செயலர் அனிதா, உறுப்பினர் லிங்கா ரெட்டி ஆகியோரிடம் போலீசார் விசாரித்துள்ளனர்.
அதேநேரம், ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ்., மீது, காங்., மற்றும் பா.ஜ., ஆகியவை குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், இவ்வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடவும் வலியுறுத்தி உள்ளனர்.