ம.தி.மு.க., அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சி உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து, கட்சி பொதுச்செயலர் வைகோவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
வைகோவுக்கு அவர் அனுப்பிய கடிதம்:
கடந்த, 1993ல், தி.மு.க.,வில் தாங்கள் அடைந்து வந்த வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல், தி.மு.க.,வில் இருந்தால், ஸ்டாலினுக்கு இடையூறாக இருப்பீர்கள் என்பதற்காக, உங்கள் மீது கொலைப்பழி சுமத்தி, கட்சியில் இருந்து வெளியேற்றினர் என, மேடை தோறும் முழங்கி, மக்களின் அனுதாபத்தை பெற்றீர்கள்.
உங்கள் குடும்பத்தை சார்ந்த யாரும் கட்சி பதவிக்கு வர மாட்டார்கள் என, அண்ணாதுரை மீதும், உங்கள் தாயின் மீதும் சத்தியம் செய்து, பேசி வந்தீர்கள்; அதை தொண்டர்களும் நம்பினர்.
அன்று கட்சி நிர்வாகிகளாக பொறுப்பு வகித்தவர்களில் பலர், நீங்கள் அரசியலுக்கு நுழையும் முன்னரே, தி.மு.க.,வின் பல்வேறு பொறுப்புகளை வகித்து, தி.மு.க.,வை வளர்த்தவர்கள்.
பிற்காலத்தில் தங்களின் தவறான அரசியல் நிலைபாடு காரணமாகவும், உங்கள் பேச்சில் நேர்மை, உண்மை இல்லாததாலும், முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கட்சியை விட்டு படிப்படியாக வெளியேறி, தி.மு.க.,வில் இணைந்தனர்.
தி.மு.க.,வை வீழ்த்த 'தந்திரம்'
உங்களுக்கு பிடிக்காத மாற்றுக்கட்சி தலைவர்களை, மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து கேவப்படுத்துவது உங்களின் இயல்பாக மாறிவிட்டது.
மாற்றுக்கட்சினரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை தவிர்த்து, கொள்கை அளவில் விமர்சிப்பது தான் அரசியல் நாகரிகம் என பல முறை சுட்டிக்காட்டிய போது, 'இனி அப்படி பேச மாட்டேன்' என உறுதியளித்துவிட்டு, மேடையேறி 'மைக்' பிடித்தவுடன், நாகரிகமற்ற முறையில் முகம் சுளிக்கும் விதமாக பேசுவதை வாடிக்கையாக கொண்டீர்கள்.
கடந்த, 2021 சட்டசபை தேர்தல் தவிர, ஒவ்வொரு சட்டசபை தேர்தலின் போதும், 'ம.தி.மு.க., வெற்றி பெற வேண்டும்' என்பதை விட, 'தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும்' என்பதில் நீங்கள் முழு முனைப்புடன் செயல்பட்டதை அனைவரும் அறிவர்.
கடந்த,2016 சட்டசபை தேர்தல் முடிவு வந்த சில தினங்களில், மக்கள் நலக்கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக வெளியேறினீர்கள்.
அன்றைய செய்தியாளர் சந்திப்பின் வாயிலாக, விஜயகாந்தின் தே.மு.தி.க.,வை தி.மு.க., கூட்டணியில் இடம் பெறாமல் செய்து, தி.மு.க.,வை வீழ்த்தியது, உங்களின் ராஜதந்திர செயல் எனக் கூறினீர்கள்.
விதி மீறி, நிதி கையாளல்!
ம.தி.மு.க., துவங்கப்பட்ட காலத்தில் இருந்து சட்டசபை, லோக்சபா, உள்ளாட்சி தேர்தல்களின் போது, தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி என தனித்தனியாக நிதி திரட்டினோம்.
ஆனால், ஒரு முறை கூட நீங்கள், உயர்நிலைக்குழு கூட்டம், மாவட்ட செயலர்கள் கூட்டம், பொதுக்குழு கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்து, ஒப்புதல் பெற்றதில்லை.
பொருளாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் கண்ணப்பன் விலகிய பின், டாக்டர் மாசிலாமணி, எம்.பி., கணேசமூர்த்தி ஆகியோர், 17 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாளர்களாக இருந்துள்ளனர்.
பொருளாளர் இருந்தும், அவரின் கையெழுத்து இல்லாமல், நீங்களாகவே, 17 ஆண்டுகளுக்கும் மேலாக காசோலையில் தன்னிச்சையாக கையெழுத்திட்டு, வங்கியில் இருந்து பணம் எடுத்து வருகிறீர்கள்.
எந்தவொரு அரசியல் கட்சியிலும், இதுபோன்ற தவறு நடக்கவில்லை. அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் துாய்மை, லட்சியத்தில் உறுதி என முழங்கிவிட்டு, மனசாட்சியை காற்றில் பறக்கவிட்டு, சுயநலமாக இருப்பீர்கள் என, கட்சியினர் யாரும் நினைக்கவில்லை.
தொண்டர்கள் எதிர்காலம் வீண்!
உங்களின் உணர்ச்சிமிக்க பேச்சால், தி.மு.க.,வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்களை நம்ப வைத்து, அவர்களின் பொதுவாழ்வை பாழாக்கி, விரயம் செய்துவிட்டீர்கள்.
இன்று, கட்சி முற்றிலும் சரிந்த நிலையில், தங்கள் மகனை கட்சியின் அரியாசனத்தில் அமர்த்த விரும்பும் உங்கள் நடவடிக்கையில், என்னை போன்றவர்களுக்கு உடன்பாடில்லை.
அண்ணாதுரையின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்து, அரசியல் செய்து வந்த என்னால், இனியும் உங்களுடன் பயணிக்க முடியாது.
உங்கள் மீது நம்பிக்கை வைத்து, அன்று உயிர் நீத்த உண்மை தொண்டர்களுக்காக, கட்சியை, உங்கள் காலத்திலேயே தி.மு.க.,வுடன் இணைத்து விடுவது நல்லது.
கடந்த, 30 ஆண்டுகளாக வராத மாற்றம், இனி எப்படி சாத்தியம் என்பதற்கு காலமும், கட்சியுமே சான்று. கட்சியினரை கடந்த, 30 ஆண்டுகளாக ஏமாற்றியதை போல இனியும் ஏமாற்ற வேண்டாம்.
ம.தி.மு.க.,வின் வாழ்நாள் உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் கொடுத்த 'ஐடியா!'
திருப்பூரில் சமீபத்தில் நடந்த, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை திறப்பு விழாவில், அமைச்சர்கள் சாமிநாதன், மா.சுப்பிரமணியன் பங்கேற்றனர். ம.தி.மு.க., அவைத் தலைவர் துரைசாமியும் பங்கேற்றார். அப்போது, 'ம.தி.மு.க.,வில் இருந்து விலகினால், தி.மு.க.,வில் உங்களை சேர்ப்பதற்கு வசதியாக இருக்கும்' என, துரைசாமியிடம் அமைச்சர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, அவரை கட்சியில் இருந்து நீக்க, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ முடிவு செய்திருந்தார். வரும் 14ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில், அவரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றவும் திட்டமிட்டிருந்தார். அப்போது, 'கட்சிக் கட்டுப்பாட்டை மீறியவர், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியவர்' என்ற காரணங்களை வைகோ சுட்டிக்காட்டுவார்.
இது தி.மு.க.,வில் சேர்ப்பதற்கு சிக்கலை ஏற்படுத்தி விடும். தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., இருப்பதால், அக்கட்சியில் இருந்து நீக்கியவரை சேர்ப்பது, உறவில் நெருடலை ஏற்படுத்தி விடும். எனவே, அங்கிருந்து வெளியே வந்து விட்டால், இங்கே சேர்வதில் பிரச்னை இருக்காது என, துரைசாமியிடம் சொல்லப்பட்டு உள்ளது.
இதையடுத்தே, ம.தி.மு.க.,வில் இருந்து விலகும் முடிவை, துரைசாமி நேற்று அறிவித்துள்ளார். வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்து, முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும், தி.மு.க.,வில் இணைய, துரைசாமி திட்டமிட்டுள்ளார்.
திருப்பூர் துரைசாமி நேற்று அளித்த பேட்டி:கடந்த, 1957ல், தி.மு.க.,வில் மாவட்டத்துக்கு, 10 பேர் தான் பொதுக்குழு உறுப்பினர்களாக இருந்தனர். அதில், நானும் ஒருவன். அப்போதிருந்த பொதுக்குழு உறுப்பினர்களில் அனைவரும் இறந்து விட்டனர். நான் மட்டும் தான் இருக்கிறேன். என் வயது, 89.தற்போதைய நிலையில் திராவிட இயக்கத்தில், என்னை விட மூத்த உறுப்பினர்கள் யாரும் இல்லை. ம.தி.மு.க.,வுக்கு தனியாக வளரும் வாய்ப்பு இனி இல்லை. வைகோவின் பேச்சாற்றல் இனி எடுபடாது. அதனால் இளைஞர்கள் அக்கட்சியில் இணைந்து, தங்களின் அரசியல் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ள வேண்டாம் என, கூறி வருகிறேன்.நான் ம.தி.மு.க.,வில் இருந்து விலகிய நிலையில், வேறு கட்சியில் இணைய மாட்டேன். என் முயற்சியால் உருவாக்கப்பட்ட, கோவை, பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலராக தொடர்ந்து செயல்படுவேன்.கட்சியின் சட்ட விதிப்படி, தொழிற்சங்கம், வேறெந்த கட்சிக்கும் ஆதரவளிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.