காசர்கோடு, மே 31- கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது முஸ்தபா என்பவரது வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது, 2,800 'ஜெலட்டின்' குச்சிகள், 7,000 'டெட்டனேட்டர்'கள், ஒரு 'டைனமைட்' உட்பட குவியல் குவியலாக பயங்கர வெடி பொருட்களுடன், 'ஒயர் பண்டல்'களும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அதுார் கிராமத்தில், கள்ள சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கலால் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, அங்கு கலால் துறையினர் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
சாராய பாக்கெட்டுகள்
நேற்று அதிகாலை, முகமது முஸ்தபா, 42, என்பவரது வீட்டுக்கு அதிகாரிகள் சென்ற போது, வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சொகுசு காரின் பின்புறம், ஏராளமான அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்த்தனர். அதில், கள்ள சாராய பாக்கெட்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதை தொடர்ந்து, வீட்டுக்குள் நுழைந்து கலால் துறையினர் சோதனையிட்ட போது, குவியல் குவியலாக பயங்கர வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அதுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் அனில் குமார் தலைமையில் போலீசார் வந்து சோதனையிட்டதில், முகமது முஸ்தபாவின் வீடு மற்றும் காரில், 13 பெட்டிகளில் 2,800 ஜெலட்டின் குச்சிகள், 7,000 டெட்டனேட்டர்கள், ஒரு டைனமைட் மற்றும் ஐந்து பண்டல் ஒயர்கள் கைப்பற்றப்பட்டன.
அவரிடம் இது பற்றி கேட்டபோது, கர்நாடகாவில், 'கிரானைட்' குவாரிகள் நடத்தி வருவதாகவும், அங்கு வெடி வைத்து தகர்க்க, வெடி பொருட்கள் சப்ளை செய்து வருவதாகவும் முகமது முஸ்தபா தெரிவித்தார். ஆனால், இதற்கான 'லைசென்ஸ்' எதுவும் தன்னிடம் இல்லை என, அவர் தெரிவித்தார்.
தற்கொலைக்கு முயற்சி
அவரது வீட்டை போலீசார் சல்லடை போட்டு சோதனையிட்ட போது, பதற்றத்துடன் இருந்த முஸ்தபா, திடீரென தன் கை மணிக்கட்டை, 'பிளேடால்' அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் உடனடியாக காசர்கோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், அவருக்கு வெடி பொருட்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது போன்ற வெடி பொருட்களை சேகரித்து வைக்க பல விதிகள் உள்ளன. அவற்றை வீடுகளிலும், கார்களிலும் சேகரித்து வைப்பது சட்டப்படி குற்றம்.
எனவே, சட்டவிரோதமாக வெடி பொருள் தயாரித்தல், பதுக்கி வைத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் முஸ்தபா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா, கேரளாவில் ஏதேனும் நாச வேலையில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை தொடர்கிறது.