மதுரை: திருவாவடுதுறை ஆதினத்தால் வழங்கப்பட்ட செங்கோல் புதிய பார்லிமென்ட்டை அலங்கரித்த நிலையில், பிரதமர் மோடிக்கு மதுரை ஆதினம் ஒரு செங்கோல் வழங்கியது சர்ச்சைக்கு வழிவகுத்தது.
![]()
|
இதுகுறித்து தினமலர் நாளிதழுக்கு மதுரை ஆதினம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அளித்த சிறப்பு பேட்டி: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு மதுரை ஆதினம் மடம் சார்பில் செங்கோல் வழங்க வேண்டும் என முன்பே முடிவு செய்திருந்தேன்.
3 மாதங்களுக்கு முன் மதுரையில் உள்ள ஒரு நகைக்கடையில் திருஞானசம்பந்தர், தாமரைப்பூ இருக்கும் வகையில் ஆளுயர செங்கோல் தயாரிக்கப்பட்டது. அப்போது புதிய பார்லிமென்ட்டில் திருவாவடுதுறை ஆதினம் வழங்கிய செங்கோல் வைக்கப்படும் என்பது எனக்கு தெரியாது.
கடந்த ஏப்ரலில் மத்திய கலாசாரத்துறை அதிகாரிகள் என்னை சந்தித்தனர். 'மே இறுதியில் புதிய பார்லிமென்ட் கட்டடம் திறக்கப்பட உள்ளது. எல்லா ஆதினங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் பங்கேற்க வேண்டும்' என்றனர். அப்போது அவர்களிடம் பிரதமர் மோடிக்காக தயார் செய்த செங்கோலை காண்பித்தேன்.
விருந்து பரிமாறிய அமைச்சர்
சில நாட்களுக்கு முன் தேதி இறுதி செய்யப்பட்டு டில்லி வருமாறு அழைத்தனர். மே 25, 26 ல் ஹரித்துவாரில் துறவியர் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு டில்லி சென்றேன்.
மத்திய கலாசாரத்துறை சார்பில் வரவேற்பு அளித்து அசோகா ஓட்டலில் தங்கவைத்தனர்.
மற்ற ஆதினங்களும் அங்குதான் தங்கினர். மே 27 காலை தமிழ்நாட்டின் உணவுகள் வழங்கப்பட்டன. மதியம் மத்திய அமைச்சர் முருகன் வீட்டில் எனக்கு சிறப்பு மதிய விருந்து அளிக்கப்பட்டது. அவரே பரிமாறினார்.
![]()
|
பிறகு மாலை 4:30 மணிக்கு பிரதமர் வீட்டிற்கு பஸ்சில் ஆதினங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம். வீட்டு வாசலில் இருந்து விருந்தினர் ஹாலுக்கு பேட்டரி காரில் சென்றோம். அங்கு மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி எங்களை வரவேற்றார். சிறிது நேரத்தில் பிரதமர் மோடி வந்தார்.
ஒவ்வொருவரிடம் பேசிவிட்டு குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். ஆதினங்கள் தனித்தனியே அவருக்கு நினைவு பரிசு வழங்கினர். நான் செங்கோல் வழங்கி ஆசீர்வதித்து கோளறு பதிகம் பாடி வாழ்த்தினேன். பிரதமர் எங்களுக்கு மரப்பெட்டியில் உலர் பழங்கள் கொண்ட கிண்ணங்களை நினைவு பரிசாக வழங்கினார்.
இரவு வரை நடந்த ஒத்திகை
பின்னர் அங்கிருந்து புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். மறுநாள் நடக்கும் நிகழ்ச்சியில் எப்படி பங்கேற்க வேண்டும் என்பது குறித்து இரவு வரை ஒத்திகை நடந்தது. பிறகு இரவு 11:00 மணிக்கு ஓட்டலுக்கு திரும்பினோம்.
மே 28 ம் தேதி காலை 6:30 மணிக்கு பஸ்சில் புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். விழா சிறப்பாக நடந்த பிறகு, காலை 10:00 மணிக்கு ஓட்டலுக்கு திரும்பினோம். சில ஆதினங்கள் உடனடியாக புறப்பட்டு மதியம் சென்னை வந்தனர். நான், குன்றக்குடி அடிகள் பேரூர் மருதாசல அடிகள் அன்று மாலை டில்லி தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்றோம். மே 29 காலை விமானத்தில் புறப்பட்டு மதுரை திரும்பினேன்.தமிழருக்கு பெருமை
இதுவரை எந்த பிரதமரும் ஆதினங்களுக்கு இப்படி மரியாதை செய்தது இல்லை. நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் தமிழ் ஒலித்தது. கலாசாரம் பிரதிபலித்தது. ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது. சிலர் நாடாளுமன்றமா, நாடாளு மடமா என கேட்கிறார்கள். இந்தியா ஒரு ஆன்மிக பூமி. புதிய பார்லிமென்ட் கட்டடம் ஜனநாயக கோயில்' என மோடி கூறினார்.
வேறு மாநில மடாதிபதிகள், ஆதினங்களுக்கு அழைப்பு விடுக்காமல், பாரம்பரியமிக்க தமிழக ஆதினங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு பங்கேற்க செய்தது சிறப்புக்குரியது. இவ்வாறு கூறினார்.