புதுடில்லி:பெரிய பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதை விட, சிறிய அளவிலான சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவே அரசு விரும்புவதாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற 'எரிசக்தி' குறித்த உச்சி மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் புரி, மேலும் கூறியதாவது:
இந்தியாவில், ஆண்டுக்கு 45 கோடி மெட்ரிக் டன் சுத்திகரிப்பு திறன் இலக்கை அடையும் பொருட்டு, பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதைவிட, சிறிய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதையே அரசு விரும்புகிறது.
சிறிய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் போது, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தடைகளை எளிதாக தவிர்க்க இயலும். மேலும், பெரிய சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதால் ஏற்படும் அதிக செலவுகளையும் தவிர்க்க முடியும்.
மஹாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில், 'இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ஆண்டுக்கு 6 கோடி மெட்ரிக் டன் திறன் கொண்ட ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளன.
ஆனா இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தடைகளை இந்நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.
ஆகவே, ஆண்டொன்றுக்கு 2 கோடி மெட்ரிக் டன் திறன் கொண்ட, சிறிய சுத்திகரிப்பு ஆலைகளை, அதிக எண்ணிக்கையில் அமைக்க அரசு விரும்புகிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.