சிவகங்கை:சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் வைக்கப்பட்டுள்ள ரயில் கால அட்டவணை தெளிவின்றி உள்ளதால் பயணிகள் குழப்பத்தில் தவிக்கின்றனர்.
மாவட்ட தலைநகரான சிவகங்கை வழியாக சென்னை - ராமேஸ்வரம், ராமேஸ்வரம் - புவனேஸ்வர், செங்கோட்டை - தாம்பரம், மானாமதுரை - திருச்சி, விருதுநகர் - திருச்சிக்கு ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழியாக இயக்கப்படும் ரயில்களின் பெயர், ரயில் வரும், புறப்படும் நேரம், எந்த கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என்ற விபரம் குறித்த ரயில் கால அட்டவணை வைத்துள்ளனர். இந்த அட்டவணை தெளிவின்றி, அடித்தல் திருத்தத்துடன் வைக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக, அட்டவணையில் வண்டி எண், ரயில் புறப்படும், சேரும் இடம், சிவகங்கைக்கு வரும், புறப்படும் நேரம், இங்கு வரும் சிறப்பு ரயில்களின் கிழமை குறித்து தெளிவு இல்லை.
இங்குள்ள ரயில் கால அட்டவணையில் ஆங்காங்கே பேப்பரை ஒட்டி அதில் எழுதியுள்ளனர். சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கவுன்டர் முன் வைத்துள்ள இந்த கால அட்டவணையால் சிவகங்கை பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.