சென்னை:எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய தமிழக பெண் முத்தமிழ்ச்செல்விக்கு, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ஜோயல்பட்டியைச் சேர்ந்த, 34 வயது பெண் முத்தமிழ்ச்செல்வி. திருமணமான இவர், சென்னை மண்ணிவாக்கத்தில் வசிக்கிறார்.
இவர் சமீபத்தில் ஜப்பான் மொழி கற்றார். வில்வித்தை, குதிரை சவாரி, மலைகளில் கண்களை மூடி ஏறுதல் உள்ளிட்ட சாதனைகளில் ஈடுபட்டார்.
உலகின் உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏற அரசு சார்பில், 10 லட்சம் ரூபாய், நன்கொடையாளர்களின் சார்பில், 15 லட்சம் ரூபாய் என, 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஏப்ரல் 5ல் எவரெஸ்ட் ஏற துவங்கி, மே 23ம் தேதி, 29 ஆயிரத்து 35 அடி உயரத்தில் உள்ள சிகரத்தை அடைந்தார்.
மேலும், தமிழகத்தில் இருந்து எவரெஸ்டை அடைந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.
இன்னொரு சாதனை
சென்னை கோவளம், மீனவக் கிராமத்தைச் சேர்ந்த, 28 வயது, அலைச்சறுக்கு வீரரான ராஜசேகர்பச்சை என்ற இளைஞரும், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். பி.சி.ஏ., பட்டதாரியான இவர், மே 19ம் தேதி காலை, 5:30 மணிக்கு எவரெஸ்டை அடைந்தார்.
இருவரும் சென்னை வந்தனர்.
அவர்களை, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, அலைச் சறுக்கு சங்க மாநில துணைத் தலைவர் வீரா உள்ளிட்டோர், விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டினர்.
முயன்றால் முடியாதது ஏதுமில்லை
எனக்கு எவரெஸ்ட் சிகரம் ஏற
வேண்டும் என, மூன்று ஆண்டுகளாக ஆர்வம் இருந்தது. அப்போதில் இருந்து,
இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டேன். எனக்கு உதவி செய்ததமிழக முதல்வர்,
விளையாட்டு துறை அமைச்சர், பயிற்சியாளர் திருலோகசுந்தர் உள்ளிட்டோருக்கு
நன்றி.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு நானே சாட்சி.
மலை ஏறும்போது ஒருவ ருக்கு, ஆறு சிலிண்டர்கள் தான் கொடுப்பர்.
மலையேற்றத்தில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. எனக்கு ஆக்சிஜன் பிரச்னை
வந்தபோது, மெக்சிகன் நாட்டு வீரர் ஒருவர் உதவினார்.
என் குழுவில்,
இறுதி வரை எவரெஸ்ட் சிகரத்திற்கு நடந்தே சென்றது நான் மட்டும்தான்.
மொத்தம், 56 நாட்கள் பயணம் இருந்தது. ஏழு கண்டங்களின் உயரமான சிகரங்களிலும்
ஏற வேண்டும் என்பது தான் என் அடுத்த இலக்கு.
ஏற்கனவே ஒன்று முடித்து விட்டேன்; அடுத்துள்ள ஆறு கண்டங்களில் உள்ள உயரமானசிகரங்களை ஏற வேண்டும்; ஏறுவேன்.
முத்தமிழ்ச்செல்வி
எவரெஸ்ட் ஏறிய பெண்